×

திருத்தணி அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் காயம்

திருவள்ளூர்: திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது மாணவன் விமல்ராஜ் தலையில் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை  அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில், அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 17 பெண் குழந்தைகள், 18 ஆண் குழந்தைகள் என மொத்தம் 35 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். இந்த அங்கன்வாடி மையத்தில், சாந்தி என்ற ஆசிரியரும், சமையல் உதவியாளராக அம்முலு என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மதிய உணவு வேளையின்போது குழந்தைகள் அனைவரும் வெளியில் சென்ற நிலையில், அங்கன்வாடி மையத்திற்குள் விமல்ராஜ் மற்றும் தீனா ஆகிய 2 சிறுவர்கள் மட்டும் இருந்துள்ளனர். அப்பொழுது திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அங்கன்வாடியில் படுத்திருந்த விமல்ராஜூக்கு தாடை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அதேபோல் தீனாவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, 2 சிறுவர்களையும் பூனிமாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சிறுவர்களின் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 


Tags : Thiruthani Anganwadi Center , Thiruthani, Anganwadi Center, Roof, 6 year old, boy, injured
× RELATED தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும்...