கர்நாடகத்தை சேர்ந்த மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி!!

பெங்களூரு : கர்நாடகத்தை சேர்ந்த காலஞ்சென்ற மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராகவும், லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தவைராகவும் ஸ்ரீசிவகுமார சுவாமி திகழ்ந்துள்ளார். கல்வி, ஆன்மீக சேவைகள், சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த சிவகுமார சுவாமி 111 வயதில் காலமானார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என்று ரெஹான் கான் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில் தகுதி வாய்ந்த சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா வழங்க முதன்மை செயலர் மூலம் பிரதமர் மோடிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு, யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் இந்திய அரசுக்கே உள்ளது. குறிப்பிட்ட நபருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு பிரதமருக்கு உத்தரவிட முடியாது. மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்,என்று உத்தரவிட்டனர். இதனிடையே ரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் நீதிபதிகள் குறிப்பிட்டு காட்டினர். 

Related Stories: