×

சென்னையில் முதல் முறையாக ரிமோட் கன்ட்ரோல் மூலம் 5 டிராபிக் சிக்னல் இயக்கம்: மாநகரம் முழுவதும் படிப்படியாக விரிவுப்படுத்த திட்டம்

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார், பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், தற்போது போக்குவரத்து சிக்னல்களில் ஸ்விட்ச் மூலம் சிக்னல்களை போக்குவரத்து போலீசார் இயக்கி வருகின்றனர். இதனால் போக்குவரத்து போலீசார் வெயில் மற்றும் மழையில் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற நேரங்கள் மற்றும் அவசர நேரங்களில் சாலையின் குறுக்கே நின்று பணியாற்றும் போக்குவரத்து போலீசாரின் பணி சுமையை குறைக்கும் வகையில் மாநகர போக்குவரத்து போலீஸ் சார்பில் வெளிநாடுகளில் உள்ளது போல் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தால், போக்குவரத்து போலீசார் சாலையின் குறுக்கே வாகன நெரிசல்களை ஒழுங்குபடுத்தும்போது, தங்களது கையில் உள்ள ரிமோட் கன்ட்ரோல் மூலம் சிக்னல்களை நின்ற இடத்திலேயே இருந்து இயக்க முடியும்.

தற்போது சோதனை ஓட்டமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி சிக்னல், ரித்தர்டன் சாலை சிக்னல், காந்தி இர்வீன் சாலை சிக்னல், நாயர் பாலம் சிக்னல், தாஸ்பிரகாஷ் சிக்னல் என 5 சிக்னல்களில் இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்சார் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சிக்னல்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீசார் சாலையின் குறுக்கே நின்றபடி, பணிக்கு எந்த இடையூறும் இன்றி ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடிவதால், போலீசாரின் பணி சுமையும் வெகுவாக குறைந்துள்ளதாக போக்குவரத்து உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த 5 சிக்னல்களை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் அண்ணாசாலை, காமராஜர் சாலை உட்பட முக்கிய சாலை சந்திப்புகள், போக்குவரத்து நெரில் மிகுந்த சிக்னல்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கும் சிக்னல்கள் விரைவில் அமைக்கப்படும் என்று போக்குவரத்து உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai , Chennai, Remote Control, Traffic Signal
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...