யுகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் இன்பத்தையும், வெற்றியையும் கொண்டுவந்து சேர்க்கட்டும்: முதல்வர் ஸ்டாலின், ஓ.பி.எஸ்., ஈபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தெலுங்கு காலண்டரின்படி, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் ’யுகாதி’ எனப்படும் தெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. மேலும், வட இந்திய மாநிலங்களில் வழக்கமாகக் கொண்டாடப்படும் சைத்ரா நவராத்திரியின் தொடக்கமாகவும் இப்பண்டிகை நாள் குறிக்கப்படுகிறது. யுகாதி திருநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:

அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் யுகாதி புத்தாண்டுத் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் நலனில் திமுக அரசு என்றுமே அக்கறையோடு செயல்பட்டு வந்துள்ளது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உகாதி திருநாளில் அரசு விடுமுறை அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. வேற்றுமைகள் கடந்து, நம்மிடையேயான உறவைப் போற்றும் திருநாளாக இந்த உகாதித் திருநாள் அமைந்திட தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி:

புதுச்சேரி மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு யுகாதி திருநாள் வாழ்த்துக்கள் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருக்கிறார். மொழி, இன வேறுபாடின்றி அனைவரும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக வாழும் பெருமைக்குரிய சூழலை கொண்டது புதுச்சேரி. பிற மொழி பேசுவோரை உடன்பிறப்பாக கருதி அவர்களது பண்டிகைகளையும் கொண்டாடுபவர்கள் புதுச்சேரி மக்கள். யுகாதி திருநாள் அனைவரது வாழ்விலும் இன்பத்தையும், வெற்றியையும் கொண்டுவந்து சேர்ப்பதாக விளங்கட்டும். அனைவருக்கும் இதயங்கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் ரங்கசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

பாரிவேந்தர் எம்.பி.:

யுகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பாரிவேந்தர் எம்.பி. தெரிவித்திருக்கிறார். கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்த, வளமான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

யுகாதித் திருநாளை முன்னிட்டு தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு அதிமுக தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், யுகாதித் திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும், உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது இதயமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இவ்வண்ணமே தமிழக மக்களோடு இணைந்து சகோதர, சகோதரிகளாய், தூய சொந்தங்களாய் வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றியே பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அம்மா மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

டிடிவி தினகரன்:

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  இனம், மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு என எல்லா வேறுபாடுகளையும் கடந்து அனைத்து தரப்பினரிடமும் அன்பு காட்டுவதில் தமிழகம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாக தமிழக மக்களோடு இரண்டற கலந்து அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று, தமிழகத்தில் கல்வி, கலை, தொழில், வணிகம் உள்ளிட்டவற்றில் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வருகிற தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகளுக்கு யுகாதி புத்தாண்டில் புதுப்புது வெற்றிகள் குவிய வாழ்த்துகிறேன். இந்த நன்நாளில் அனைத்து தரப்பு மக்களும் அகமகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி திருநாளுக்கு ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கு, கன்னட புத்தாண்டான உகாதி திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும்  சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும். தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களுக்கு எனது உகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: