×

'சட்டமன்ற தீர்மானங்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் தேவை': மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கலானது..!!

டெல்லி: மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக உறுப்பினர் பி.வில்சன் தாக்கல் செய்தார். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகளின் மீது மாநில ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கான கால வரம்பினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாகவும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பேசிய அவர்; சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் வகுக்க வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மேல் இதுபோன்ற சட்டத்தை நிலுவையில் வைக்கக்கூடாது  என கூறினார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்தார். தற்போதைய அரசியலமைப்பு பிரிவுகளின்படி சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுப்பதற்கு தற்போது கால வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே நீட் போன்ற முக்கிய மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். இதனால் மாநில அரசுகள் மக்களின் நலனுக்காக நிறைவேற்றும் மசோதாக்கள் செயல் வடிவம் பெற பல மாதங்கள் கால தாமதமாகின்றன.

இந்நிலையில், இதனை குறைக்கும் வகையில், ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அதில், ஆளுநர் அவராகவே முடிவெடுக்கும் சட்ட மசோதாக்கள் மீது 2 மாதத்திலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய மசோதா மீது ஒரு மாதத்திலும் முடிவெடுக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து வகுத்து அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிநபர் மசோதா, அடுத்த நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமா? இல்லையா? என்பது தெரியவரும்.


Tags : Bill, Governor, Schedule, States
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...