×

சுற்றுலா செயலியை மேம்படுத்த திட்டம்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

ஆலந்தூர்: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், தமிழக சுற்றுலா துறையை மேம்படுத்தும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறியும் வகையில் 3 நாள் பயண சுற்றுலா கண்காட்சியை நேற்று அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், குஜராத், இமாச்சல், மாலத்தீவு, நேபாளம் ஆகியவற்றின் சுற்றுலா அரங்குகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். அப்போது ஐ.நா சபை முன்னாள் இணை செயலாளர் எரிக் சோல்ஹிம், முன்னாள் முதன்மை செயலாளர் சந்திரமோகன், தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மதிவேந்தன்கூறியதாவது:

கடந்த 2 ஆண்டு கால கொரோனா தொற்று பரவல் தடைக்கு பிறகு, தற்போது பல்வேறு தனியார் சுற்றுலா நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 நாள் சுற்றுலா கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த மானிய கோரிக்கையில், சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்வேறு புதிய திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. சுற்றுலா தலங்களில் நீர் விளையாட்டுகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, தனி நிதியும் உருவாக்கப்படுகிறது. தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், நீர் விளையாட்டுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

மேலும், இதுவரை சுற்றுலா தலமாக கண்டறியப்படாத இடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழக சுற்றுலா துறை குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே தளத்தில் அறிந்து கொள்ளும் வகையில், தற்போது உள்ள செயலியை மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

Tags : Minister ,Maduventan , Travel Processor, Upgrade, Project, Mathivendan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...