திருமலை பாபவிநாசம் சாலையில் பரபரப்பு இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டிய யானைகள்

திருமலை :  திருமலை பாபவிநாசம் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாசல மலையில் நான்கு யானைகள் கூட்டம் தொடர்ந்து சுற்றிவருகிறது. கடந்த ஒரு மாத காலமாக சேஷாசல மலையில் சுற்றி வரும் இந்த யானைகள் கூட்டம் பக்தர்கள் உள்ள பகுதிக்கு வராமலிருக்க தேவஸ்தான வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் நேற்றுகாலை இருசக்கர வாகனத்தில் பக்தர்கள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது, சாலையை கடக்க முயன்ற யானைக்கூட்டம் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகளை சிறிது தூரம் துரத்தியது.

இதனால் பக்தர்கள் அலறி அடித்து கொண்டு வாகனத்தை திருப்பி வந்த வழியாக சென்றனர். பின்னர், யானைகள் அனைத்தும் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. யானைகள் கூட்டம் திருமலையில் சேஷாசலம் மலைப் பகுதியில் முகாமிட்டுள்ளதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், யானைகள் கூட்டம் இருந்தால் அதன் அருகில் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: