×

பெட்ரோல், டீசல் விலை குறித்து நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயலின் வெளிப்பாடாகும் :சீமான்

சென்னை : சுங்கச்சாவடி கட்டண உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்  என்று சீமான் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயானப் போரினைக் காரணமாகக்காட்டி, எரிபொருள் விலை தொடர்ந்து உயருமென மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பன்னாட்டுச்சந்தையில் தற்போது கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையிலும், எரிபொருள் விலை உயர்வு தவிர்க்க முடியாதது எனக்கூறி, ஒன்றிய அரசு முற்றாகக் கைவிரித்திருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஒன்றிய அரசின் தவறானப்பொருளாதாரக்கொள்கைகளாலும், எதேச்சதிகார முடிவுகளாலும், பேரிடர் காலம் தந்தத் துயரினாலும் ஏற்கனவே பெரும் பொருளாதார நலிவைச் சந்தித்து நிற்கும் மக்களுக்கு, அன்றாடச் செலவினங்களை எதிர்கொள்வதே பெரும்பாடாய் மாறி நிற்கையில், எரிபொருள் விலையையும் ஏற்றச்செய்து, அத்தியாவசியப்பொருட்களின் கட்டற்ற விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று உருளை உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தியது போதாதென்று, சுங்கச்சாவடி கட்டணத்தையும் 40 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் செயல் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்துசெல்லும் வாகனங்களின் வாடகைச்செலவு பல மடங்கு அதிகமாகும். இவை யாவும், விற்பனைச்சந்தையில் எதிரொலித்து, அத்தியாவசியப்பொருட்களின் அபரிமித விலையேற்றத்திற்கே வழிவகை செய்யும். இதனால், நடுத்தர, ஏழை மக்கள் மாதம் ஒன்றுக்கு 1,500 ரூபாய் அளவுக்குக் கூடுதலாகச் செலவிட வேண்டிய கொடிய நெருக்கடி நிலைக்கு ஆளாவார்கள். கச்சா எண்ணெயின் விலை சர்வதேசச்சந்தையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தபோதும், ஏறக்குறைய மூன்றுமாதக்காலமாக ஐந்து மாநிலத்தேர்தல் முடிவுகளுக்காகவே, எரிபொருள்களின் விலையை மாறுதலுக்கு உட்படுத்தாது கட்டுப்படுத்திவிட்டு, தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம்பெறாதபோதும் எரிபொருள் விலையை ஏற்ற, கச்சா எண்ணெய் நிறுவனங்களின் மூலமாக ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வழியேற்படுத்துவது பச்சை மோசடித்தனமாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு, சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தமாகக் கையளித்தன. கச்சா எண்ணெய் விலை உயரும்போது எரிபொருள் விலையை உயர்த்துவதில் ஆர்வங்காட்டும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது எரிபொருள் விலையைக் குறைக்க ஒருபோதும் முனைப்பு காட்டுவதில்லை. இதனைக் கண்காணித்து, முறைப்படுத்த வேண்டிய ஒன்றிய அரசு, வெறுமனே தேர்தல் நேரங்களில் மட்டும் விலையை உயர்த்தாமல் கட்டுப்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் பகல்கொள்ளையடிப்பதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏற்கவே முடியாத பெருங்கோடுமையாகும். ஏற்கனவே, தொடர் ஊரடங்கு, தொழில் முடக்கம், வேலையிழப்பு, வருமானமின்மை, பொருளாதார நலிவு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களை இது மேலும் துயரத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. வாஜ்பாய் தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஆட்சிக்காலம், மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலம் போன்றவற்றில் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விற்கப்பட்டதே தற்போதைய கட்டுக்கடங்காத விலைவுயர்வுக்குக் காரணமெனவும், 2026-ம் ஆண்டுவரை இந்நிலை நீடிக்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறியிருப்பது சிறிதும் ஈவிரக்கமற்றக் கொடுஞ்செயலின் வெளிப்பாடாகும். இது எளிய மக்களின் வாழ்நிலை குறித்தும், செலவினங்கள் குறித்தும் துளியும் அக்கறையோ, பரிவோ அற்ற ஒன்றிய அரசு, அடித்தட்டு மக்கள் மீது தொடுக்கும் பொருளாதாரப்போராகும்.

ஆகவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நாளுக்கு நாள் உயர்த்தப்பட்டு வரும் எரிபொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமெனவும், பன்னாட்டுச்சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இறக்கத்தினால், மக்கள் பெறவேண்டிய நியாயமான விலைக்குறைப்புப் பயன்களைக் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய எரிபொருள்களுக்கான விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மொத்தமாக மீளப்பெற வேண்டுமெனவும், நெடுஞ்சாலை பராமரிப்பை அரசே ஏற்று சுங்கச்சாவடி கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Nirmala Sitharaman ,Seeman , Petrol, Diesel, Nirmala Sitharaman,: Seeman
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...