×

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்-பெரிய, சிறிய தேர்களை பக்தர்கள் தலையில், தோளில் சுமந்து வீதியுலா

தொட்டியம் : தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றனர்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

22ம் தேதி காப்பு கட்டுதல், அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானையில் பொங்கல் வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை, பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் அதிகாலை நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணி அளவில் பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தியுடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரை காளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் வீதிஉலா கோட்டைமேடு வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது. இதை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக வானப்பட்டறை மைதானம் சென்று பின்னர் எல்லை உடைக்கும் திருவிழா, வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த 18 பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பூசாரிகள் செய்திருந்தனர். திருச்சி எஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : Thotiyam ,Madurai Kaliamman Temple Chariot Festival Kolagalam , Thotiyam: Thotiyam Madurai Kaliamman Temple Panguni Chariot Festival
× RELATED முசிறி ,தொட்டியம் பகுதியில்...