×

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்வு: வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்பு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாக உயர்ந்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரையில் உயர்த்தியுள்ளது. இது நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் சரக்கு வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 5,134 கி.மீ., சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள் ஒன்றிய அரசின் நிதியில், மாநில நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, தமிழகம் முழுவதும் தற்போது 48 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை அமைத்த முதலீடு திரும்பப் பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

அதற்கு பின்னர் 40 சதவீத சாலை பராமரிப்புக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 சதவீத அளவிற்கு சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது.இந்நிலையில், சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள வானகரம், சூரப்பட்டு மற்றும் பட்டரை பெரும்புதூர் உட்பட தமிழகம் முழுவதும் 24 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி அதற்கான ஆணையை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த புதிய கட்டணம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. தற்போது சுங்கச்சாவடிகளில் 6 வகையாக வாகனங்களை பிரித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கார் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் இருந்து ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், பேருந்துகளுக்கு ரூ.80ல் இருந்து ரூ.120 வரைக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது.

பல ஆக்சில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.180ல் இருந்து  270ஆக வசூலிக்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம் சுங்கசாவடிகளுக்கு ஏற்றப்படி வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேல் ஆக்சில் உள்ள வாகனங்களுக்கு ரூ.240ல் இருந்து ரூ.360 வரை வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் 60 கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றிய அமைச்சரிடம் நேரடியாக கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சென்னை புறவழிச்சாலையில் உள்ள 6 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கு ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரியும், நாடாளுமன்றத்தில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால், தற்போது சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள வானகரம், சூரப்பட்டு, பட்டரை
பெரும்புதூர் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 24  சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10ல் இருந்து ரூ.40 வரை உயர்த்தி உள்ளது.தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சுங்கக்கட்டணத்தை உயர்த்தி இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 எனவே தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள 24 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளின் கட்டணம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயர்த்தப்படும் என்று ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu , Petrol and diesel prices have gone up, and tariffs have gone up
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...