நீலகிரி மாவட்டத்திற்கு 3350 டன் உரங்கள் ஒதுக்கீடு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் காய்கறி மற்றும் தேயிலை விவசாயிகளுக்கு 3350 டன் நேரடி மற்றும் கலப்பு உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு என்சிஎம்எஸ்., மூலம் விநியோகிக்கப்ட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு என்சிஎம்எஸ்., எனப்படும் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் குறைந்த விலையில் உரங்கள், உருளைகிழங்கு விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு 80 சதவீதம் கடன் தொகையும், 20 சதவீதம் உரம், பூச்சிகொல்லி மருந்துகள் வாங்கி கொள்ள ரசீது வழங்கப்படும். இதனை என்சிஎம்எஸ்., அலுவலகத்தில் சமர்பித்து உரங்கள் பெற்று கொள்ளலாம். இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டது.

உரம் வாங்கி கொள்ள ரசீதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு போதிய அளவு உரம் ஒதுக்கீடு இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. சீராக உரம் விநியோகம் செய்ய வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு தட்டுபாடின்றி நேரடி உரம், கலப்பு உரம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்திற்கு 3350 டன் உரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐதராபாத், தூத்துகுடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊட்டி என்.சி.எம்.எஸ். குடோனுக்கு வந்தது. உர மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி வைத்தனர். விவசாயிகள் வரவழைக்கப்பட்டு தேவையான உரங்கள் வழங்கப்பட்டது. அவர்கள் சரக்கு வாகனங்களில் வாங்கி சென்றனர். விவசாயிகளுக்கு உரம் வழங்குவதை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் தமிழ்செல்வன், செயலாளர் அய்யப்பன் பார்வையிட்டனர்.

இதுகுறித்து துணை பதிவாளர் தமிழ்செல்வன் கூறுகையில், நீலகிரி மாவட்டத்துக்கு யூரியா 355 டன், பொட்டாஷ் 570 டன், சூப்பர் பாஸ்பேட் 855 டன், காம்ப்ளக்ஸ் 390 டன், அம்மோனியம் சல்பேட் 1176 டன் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 350 டன் உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்து உள்ளது.

இந்த உரங்கள் வரும் மே மாதம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயிகளுக்கு அம்மோனியம் பாஸ்பேட் உரம் வழங்கப்படுகிறது, என்றார்.

Related Stories: