உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலி... உடல்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரம்!!

மாஸ்கோ : ரஷ்யா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணிகளை உக்ரைன் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, ஒரு மாதத்திற்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. கீவ், இர்பின் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கார்க்கிவ் நகரில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவால் அடுக்குமாடி குடியிருப்புகள் தரைமட்டமாகின. எரிவாயு குழாய்கள் சேதம் ஆகின. ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின. மரியுபோல் நகரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதால் அங்கிருந்து மக்கள் செஞ்சிலுவை சங்கத்தினரின் உதவியுடன் 45 பேருந்துகளில் வெளியேற்றப்பட்டனர்.

உக்ரைனில் ரஷ்யப் படைகளின் தாக்குதலால் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இர்பின் நகரில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை உக்ரைன் பேரிடர் மீட்புக் குழுவினர் பிளாஸ்டிக் பைகள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த கார்க்கிவ் புறநகர் பகுதி கிராமம் ஒன்றை உக்ரைன் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர் தாக்குதலில் கிவ் நகரம் முழுவதும் ஏராளமான வாகனங்கள் சிதறி கிடைக்கும் நிலை காணப்படுகிறது. போரில் ரஷ்ய படைகள் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: