×

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரசார் போராட்டம்: காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் நேற்று தங்கள் வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர், மோட்டார் பைக்குள் உள்ளிட்ட வாகனங்களுக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் தலைமையில் பார்டர் தோட்டம் பூபேகம் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், காஸ் சிலிண்டர் விலை  உயர்வை உணர்த்தும் வகையில், பெண்களுக்கு விறகு வழங்கப்பட்டது.

தென்சென்னை மாவட்ட தலைவர் அடையாறு துரை தலைமையில் கஸ்தூரிபாய் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் காங்கிரஸ் ஆர்.டி.ஐ.பி. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மயிலை அசோக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சின்மயா நகர் கோயம்பேடு மார்க்கெட் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கே.விஜயன், பகுதி தலைவர் கே.ராஜபாண்டி, மாநில பொதுச் செயலாளர்கள் இல.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வட சென்னை கிழக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் ஆர்கேநகர் 1வது சர்க்கிள் சார்பாக சர்க்கிள் தலைவர் சையது தலைமையில் தண்டையார்பேட்டை பஸ் டெப்போ அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் முன்னிலையில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பட்டது. அப்போது, பழைய காலத்தில் மண் அடுப்பில் சமையல் செய்வது போன்றும், மக்களின் வயிற்றில் அடிக்கின்ற ஒன்றிய அரசை கண்டித்து வாயில் அடித்து அழுது எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில், முன்னாள் மாவட்டத் தலைவர் டி.வி.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் அண்ணாநகர் சாந்தி காலனி அன்பு இல்லம் அருகே அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் முன்னிலையில் சமையல் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஐஎன்டியூசி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் முனுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நிர்வாகிகள் எம்.முனியாண்டி, வெங்கடேசன், டி.கிருஷ்ண பிரசாத், கீர்த்தி, கே.பி.மோகன்ராஜ், மதுகுல கோவிந்தன், துறைமுக ஐஎன்டியூசி மூத்த துணை தலைவர் ஆர்.செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அடையாறு சாஸ்திரி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வேளச்சேரி பகுதி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாநில துணை தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் தாமோதரன், திருவான்மியூர் மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல நொச்சிக்குப்பம், நம்பிக்கை நகர் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Chennai ,Union government ,Cass Cylinder , Congress protests in Chennai against rising petrol prices: Wearing evening gown for gas cylinder
× RELATED யானை பசிக்கு சோளப் பொறி போல்...