×

சுங்கக் கட்டணம் உயர்வால் பொதுமக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள்: ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: சுங்க கட்டண உயர்வால் மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவார்கள் என்பதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை நீண்டகாலமாகவே நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. சொந்த வேலைக்காக வெளியில் சென்று வரும் வாகனங்களுக்குக் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதால், உள்ளூர் குடியிருப்பு வாசிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக மோதல் நிலவுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வைத் தொடர்ந்து சுங்கக் கட்டணமும் உயர்த்தப்படுவதால் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தும். அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள். எனவே, சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய பாஜ அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: உரிமம் காலாவதியான சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சுங்கச் சாவடி கட்டணங்களை உயர்த்திருப்பது மோசமான நடவடிக்கையாகும். பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது எந்த வகையில் நியாயம்?  மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி சுங்கக் கட்டண உயர்வை  கைவிடுவதுடன், காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலை நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா: உக்ரைன்-ரஷ்ய  போரினாலும், அத்தியாவசியப் பொருட்கள் விலை குறுகிய காலத்தில் உச்சத்தை தொட்டுவிட்ட நிலையில், சுங்கச்சாவடி கட்டண உயர்வும் நுகர்வோரின் மீதே  திணிக்கப்படும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வை  உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 60 கிலோ மீட்டருக்குள் இருக்கிற சுங்கச்சாவடிகள் அனைத்தும் அரசின் வழிகாட்டுதலின்படி உடனடியாக அகற்றப்பட வேண்டும். உடனடியாக சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

Tags : Waiko ,US government , Public will suffer due to tariff hike: Waiko condemns US government
× RELATED ஈகைத் திருநாள், மனிதநேயத்தின்...