சன் குடும்பம் விருதுகள் விழா: கோலாகலமாக நடந்தது

சென்னை: சின்னத்திரைக் கலைஞர்களை கவுரவிக்கும் சன் குடும்பம் விருதுகள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் விருது வழங்கி சன் டிவி கவுரவித்து வருகிறது. கலைஞர்களின் திறனையும் உழைப்பையும் கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா மேற்கு தாம்பரத்திலுள்ள லியோ முத்து அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சன் டிவி கலைஞர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் கண்கவரும் நடன நிகழ்ச்சிகள், பிற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரைப்படக் கலைஞர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்தன. பின்னர் ‘பெஸ்ட் கேட்டகரி’, ‘பேவரைட் கேட்டகரி’ என இரண்டு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ‘பேவரைட் கேட்டகரி’ என்பது மக்கள் ஓட்டு போட்டு தங்களுக்கு பிடித்த கலைஞர்களை தேர்வு செய்யும் முறையாகும். சன் குடும்பம் விருது விழாவில் இந்த ஆண்டு முறை முதல்முறையாக ‘பேவரைட் கேட்டகரி’ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விழா அரங்கில் சன் டிவி சார்பில் 4 பூத்துகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்று, தமிழ் பண்பாட்டை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு வந்த கலைஞர்கள் சிலம்பம் சுற்றி, கரகாட்டம், மயிலாட்டம் ஆடினர். மற்றொரு பூத்தில் கண்ணாடி, பொம்மை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. 3வது பூத்தில் ஸ்பின் வீல் இருக்கும். தாங்கள் நாமினேட் செய்ய விரும்பும் சிறந்த நடிகர், நடிகைகளை அதில் கலைஞர்கள் தேர்வு செய்தார்கள். 4வது பூத்தில் சன் குடும்பம் விருதுகளுக்கான டிராபிகள் வைக்கப்பட்டிருந்தன. ‘இந்த முறை உன்னை வென்றே தீருவேன்’ என டிராபியுடன் கலைஞர்கள் சபதம் எடுத்துக்கொண்டனர்.

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. விழா அரங்கமே திருவிழா கோலம் பூண்டிருந்து. அரங்கம் முழுவதும் தலைகளாக தென்பட்டன. ஒவ்வொரு விருது அறிவிக்கப்பட்டதும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விழா அரங்கை கரவொலி அதிர வைத்தது. இந்த கோலாகலமான விழா விரைவில் சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

Related Stories: