×

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தால் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை தீர்க்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வீல்கர் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக் குழுவின் அதிகாரத்தை அதிகரிப்பது தொடர்பாக தமிழக, கேரள அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டு வரலாம்,’ என யோசனை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் என்ன? அது எந்தெந்த அதிகாரங்களுடன் செயல்படும்? இந்த ஆணையத்தின் கீழ் பெரியாறு அணை விவகாரம் வந்தால் பிரச்னை சுமூகமாக முடியுமா? இதற்காக, ஒன்றிய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன?’ என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும், இது குறித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படியும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர், விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.


Tags : National Dams Protection Authority ,Mullaiperiyaru ,Supreme Court , Can the National Dams Protection Authority solve the Mullaiperiyaru dam problem? Supreme Court question
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...