×

வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசியாக மாற்றி இளைஞர்களுக்கு சப்ளை: மெடிக்கல் ஷாப் ஊழியர் உள்பட 3 பேர் கைது

பெரம்பூர்: வலி நிவாரணி மாத்திரைகளை போதை ஊசியாக மாற்றி இளைஞர்களுக்கு சப்ளை செய்த, மெடிக்கல் ஷாப் ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூர் பகுதியில் சிலர், கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்பதாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வானனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார், மேற்கண்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், ஜவகர் நகரில், நேற்று போதை மாத்திரைகளுடன் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில், கொளத்தூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சூர்யா (25) என்பதும், இவர், திருவொற்றியூர் சாத்துமா நகரை சேர்ந்த பிரபுவிடம் (35), போதை மாத்திரைகளை வாங்கி, அதை நசுக்கி, தண்ணீரில் கலந்து போதை ஊசியாக மாற்றி, கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ஜாபருடன் (29) சேர்ந்து  கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரபு மற்றும் ஜாபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், பிரபு கடந்த 15 வருடங்களாக சென்னையில் உள்ள பிரபல மருந்தகத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருவதும், அவர் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கியதும் தெரிந்தது. மேலும், 10 மாத்திரைகள் கொண்ட அட்டையினை 400 ரூபாய்க்கு வாங்கி அதனை 800 ரூபாய்க்கு விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 582 மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் கூறுகையில், ‘‘வலி நிவாரணி மாத்திரைகளை சிலர், முறைகேடாக வாங்கி, போதை ஊசியாக மாற்றி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பல மெடிக்கல் ஷாப்களில் மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மாத்திரைகளை கொடுப்பதினால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. இதனால், மாணவர்கள் பலர் இந்த போதை ஊசி பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பிரபு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்வதால், அதை பயன்படுத்தி வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்துள்ளார். எனவே, எந்த மெடிக்கல் ஷாப்களில் இருந்து அதிக அளவில் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்படுகிறது என்பது குறித்தும், அவ்வாறு மருத்துவரின் ஒப்புதல் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்கும் உரிமையாளரை கைது செய்வதோடு, அந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Tags : Three arrested, including medical shop employee, for supplying painkillers to youths
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...