விழுப்புரத்தில் 3 மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் எஸ்பி, ஏடிஎஸ்பி நேரில் விசாரணை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று நடந்த 3 மாவட்ட போலீஸ் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது குறித்து அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரக காவல்துறை ஆய்வுக்கூட்டம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நேற்று நடந்தது. வடக்கு மண்டல ஐஜி பிரேம்ஆனந்த் சின்ஹா, டிஐஜி பாண்டியன், எஸ்பிக்கள் (விழுப்புரம்) ஸ்ரீநாதா, (கடலூர்) சக்தி கணேசன், (கள்ளக்குறிச்சி) செல்வகுமார் மற்றும் 3 மாவட்ட ஏஎஸ்பி, ஏடிஎஸ்பி,  டிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மூன்று மாவட்டங்களிலும்  சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசார் மற்றும் காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பரிசு வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து எஸ்பிக்களுடன் டிஜிபி கலந்துரையாடினார். இதில் குற்றங்களை தடுப்பது எப்படி? கஞ்சா வேட்டை 2.0 திட்டம் மூன்று மாவட்டங்களிலும் எவ்வாறு செயல்படுகிறது? என கேட்டறிந்தார். டிஜிபி சைலேந்திரபாபு பேசும்போது,  கடந்த பத்தாண்டுகளில் இந்த சரகத்தில் பெரிய  அளவில் கலவரங்கள் ஏற்படவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்னை எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக எஸ்பி, ஏடிஎஸ்பி ஆகியோர் நேரடியாக சென்று உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரச்னை நடைபெறும் இடங்களில் டிஎஸ்பி ஒருநாள் அங்கேயே தங்கி பிரச்னையை தீர்க்க வேண்டும், என்றார்.

Related Stories: