மாற்றுத்திறனாளி பெண் மீது போலீஸ் தாக்குதல் டிஎஸ்பி நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை கண்டனம்

மதுரை: மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த நாகலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மாற்றுத்திறனாளியான எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் தாயுடன் குடிசை வீட்டில் வசிக்கிறேன். புயல் காலத்தில் எங்கள் வீடு முழுமையாக சேதமடைந்தது. வருவாய்த்துறையினர் மூலம் நிதியுதவி கிடைத்தது. இதனால் கான்கிரீட் வீடு கட்டி, மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தேன். சிவில் பிரச்னை தொடர்பாக எங்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகார்தாரருக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் நடந்து கொண்டார். வீட்டை காலி செய்வதாக கட்டாயப்படுத்தி, வெற்று பேப்பரில் கையெழுத்து கேட்டனர். என் தாய் மறுத்ததால், கடந்த அக். 21ல் சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.  ஜன. 6ல் வீட்டுக்கு வந்த போலீசார் எங்களை தாக்கினர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். எங்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ‘‘இயந்திரத்தனமாக போலீசார் நடந்துள்ளனர். எனவே, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் அவர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய பிரிவுகளில் எஸ்பி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நேர்மையாக விசாரணை நடத்தி 12 வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பியின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்பதால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: