தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தல் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நீட் தேர்வு விலக்கு, ஜி.எஸ்.டி. நிலுவை, மேகதாது, கச்சத்தீவு விவகாரம் உள்பட 14 கோரிக்கைகளை முன்வைத்தார்

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தார். தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், நீட்தேர்வுக்கு விலக்கு அளிப்பது, ஜிஎஸ்டி நிலுவையை வழங்குவது, மேகதாது, கச்சத்தீவு விவகாரங்கள் உட்பட 14 கோரிக்கைகளை வலியுறுத்தினார். சர்வதேச பயணமாக துபாய் அபுதாபிக்கு சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சுமார் ரூ.6,100 கோடி முதலீடுகளை ஈர்த்த நிலையில் தமிழகம் திரும்பினார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நான்கு நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்ற முதல்வரை, அங்கிருந்த திமுக எம்பிக்கள் வரவேற்றனர்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு புதிய இல்லத்தில் ஓய்வு எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.  இதை தொடர்ந்து, பிற்பகல் 12.15 மணி அளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை 1 மணி அளவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றிய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய கோரிக்கை மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: மேகதாது பிரச்னை: மேகதாதுவில் குடிநீர் திட்டம் என்ற போர்வையில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும். காவிரி நதி நீர் தீர்ப்பாயம் வழங்கிய இறுதி தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டு, வருடந்தோறும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நீரின் அளவு 3 வகைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கபினி உள்படுகை நீர்பிடிப்பு, கபினி அணையில் இருந்து வரும் நீர், கிருஷ்ணராஜ சாகர், சிம்ஷா, அர்காவதி மற்றும் சுவர்ணாவதியில் இருந்து கட்டுப்பாடின்றி வரும் நீர் மற்றும் பல்வேறு சிறு சிறு ஆறுகளில் இருந்து வரும் நீர் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டும். மேகதாது அணை திட்டம் செயல்படுத்தப்பட்டால் கட்டுப்பாடின்றி வரும் நீர் கர்நாடகாவுக்கு திருப்பி விடப்படும். இதனால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை.

மேலும், காவிரி ஆறு பாயும் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியது. ஆனால், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் கர்நாடகா அரசு மேகதாது திட்டத்துக்காக 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதனால், தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேகதாது திட்டத்துக்கு ஜல்சக்தி அமைச்சகம் ஒப்புதல் வழங்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

* மீன்வளம்: பாக் வளைகுடாவில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். படகுகளை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள், தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்துகிறது. எனவே, பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல்கள், கைது செய்யப்படுவது போன்றவை குறித்து, பிரதமருக்கு பல்வேறு கடிதங்களை எழுதியுள்ளேன். இதற்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தியுள்ளேன். அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு, இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க கவனத்துக்கு கொண்டு வந்து வலியுறுத்தியுள்ளேன். கடந்த 11 ஆண்டுகளில் 3,630 அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர். 3,644 பேர் விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.  

46 மீனவர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இன்னும் திருப்பி அனுப்பப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் நீண்டகாலமாக இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, சேதம் அடைந்துள்ளது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தில் நிரந்தர பாதிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பு உறவுக்கான உயர்மட்ட குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் பிடிக்கப்படுவதையும், கைது செய்வது, துன்புறுத்துவது போன்ற செயல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2016ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இணை செயற்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாட்டை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

* எரிசக்தி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மின் உற்பத்தி ஆலைகளுக்கு,  நாள் ஒன்றுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆண்டுக்கு இதன் தேவை 26.28 மில்லியன் டன்களாக உள்ளது. நிலக்கரி நிறுவனங்களுடன் ஆண்டுக்கு 23.763 மெட்ரிக் டன் பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2021-22 ம் ஆண்டில் பிப்ரவரி வரை 15.764 மெட்ரிக் டன் வழங்கப்பட்டுள்ளது. இது 72 சதவீதம்தான். எனவே, சிங்கரேணி நிலக்கரி சுரங்க நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 4.2 மில்லியன் டன் பெற வேண்டும். தமிழகத்துக்கு தினசரி தேவையான 72,000 டன்களை டால்சர், பாரதீப் மற்றும் விசாகபட்டினம் துறைமுகங்களில் இருந்து ரயில்களில் கொண்டு வர கூடுதலாக, குறைந்த பட்சம் 20 ரேக்குகளையாவது ஏற்பாடு செய்ய வேண்டும். ரெய்கார்  புகழூர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும்.

* வரி பகிர்வு: ஒன்றிய அரசின் வரி வருவாயில் இருந்து மாநிலங்களுடன் செஸ் உள்ளிட்ட வரிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். 14வது நிதிக்கமிஷன் அறிக்கைப்படி, செஸ் வரியை அதனை வசூலித்த நோக்கத்துக்காக முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஆனால், இதில் வெளிப்படை தன்மை இல்லை என்பதையும், இந்த வசூலில் இருந்து நிதி பயன்படுத்தப்பட்டது குறித்து முழுமையான கணக்கீடு இல்லை எனவும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டள்ளது.

 செஸ் மற்றும் மேல் வரிகள், பட்ஜெட் மறு மதிப்பீட்டின்படி 2021-22 நிதியாண்டில் 26.7 சதவீதமாக உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, முன்பு முறையே 56 சதவீதம் மற்றும் 35 சதவீதமாக இருந்தது, பின்னர் முறையே 91 சதவீதம் மற்றும் 85 சதவீதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டில், பெட்ரோல், டீசல் மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.1,32,899 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது 48 சதவீதம் அதிகரிப்பாகும். ஆனால், தமிழக அரசுக்கு அந்த ஆண்டில் ரூ.944.47 கோடி பகிரப்பட்டுள்ளது. 2020-21ல் இது ரூ.572.34 கோடியாக குறைந்து விட்டது. நாட்டின் மக்கள் தொகையில் தமிழகம் 6.12 சதவீதமம், பொருளாதாரத்தில் 10 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வரி பங்கீட்டை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜுன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல் வேண்டும். கடந்த பிப்ரவரி 28ம் தேதிப்படி, தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.13,504.74  கோடி நிலுவையில் உள்ளது.

* சுகாதாரம்: நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தத் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்த இந்த உயர்மட்ட குழு, தனது பரிந்துரைகளை 14.07.2021 அன்று சமர்ப்பித்தது. நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம். தனிச் சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் என இந்த குழு பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் 13.9.2021 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு, 18.9.2021 அன்று கவர்னருக்கு அனுப்பப்பட்டது. இதனை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, மீண்டும் 8.2.2022 அன்று மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகளில் மாணவர்களை அவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிய வேண்டும்.

* பள்ளிக்கல்வி: ஒன்றிய அரசு கடந்த 29.7.2020 அன்று கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கை, கவலை அளிப்பதாக இருக்கிறது. கடந்த 1968ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

தாய்மொழியில் (தமிழில்) கற்பதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தவிர, நாடு முழுவதுமான தகவல் தொடர்புக்காக ஆங்கில கல்வி உள்ளது. எனவே, சமஸ்கிருதம் போன்ற பிரபலமற்ற மொழியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவது தமிழக மாணவர்களுக்கு இடர்பாட்டை ஏற்படுத்தும். எனவே இருமொழிக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தற்போது தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் கல்வி முறையை மாற்றக்கூடாது. இதுதவிர, பிரதமர் வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த வேண்டும். காலணி உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். டிடிஐஎஸ் திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சேலம் எக்கு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும். மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.

இதுபோல், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - 2க்கு ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும். 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக  சென்னையை அறிவிக்க வேண்டும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லல்படும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும், நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும், கூடங்குளம் அணுமின் திட்டம் செலவழித்த அணு எரிபொருளை நீக்க வேண்டும், நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. நாளை மாலை 5 மணிக்கு அண்ணா-கலைஞர் அறிவாலய புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

* கெஜ்ரிவாலுடன் பள்ளிகளை பார்வையிடுகிறார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பயணத்தின் 2வது நாளான இன்று, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து டெல்லி அரசு பள்ளிகள், மொகல்லா மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

* பிரமாண்ட வரவேற்பு

டெல்லி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து மொத்தம் மூன்று இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு வழங்கப்பட்டது. இதில், ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். செண்டை மேளம் அடித்தும்,  மலர் தூவியும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் வலியுறுத்திய 14 கோரிக்கைகள்

1. காவிரியின் குறுக்கே கர்நாடகாவால் மேகதாது அணை கட்டும் திட்டம் தொடர்பான  பிரச்னை.

2. பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். கச்சத்தீவு மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பது.

3. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ரெய்கார் புகழூர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவிக்க வேண்டும்.

4. மாநிலங்களுடன் செஸ் உள்ளிட்ட வரி வருவாயை பகிர்ந்து கொள்வது, இந்த ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகும் ஜிஎஸ்டி இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும்.

5. மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு.

6. பிரதமர் வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.

7. காலணி உற்பத்தியில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். டிடிஐஎஸ்  திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சேலம் எக்கு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும். மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.

8. தமிழகத்தில் தற்போதுள்ள கல்வி முறையே தொடர வேண்டும். மாணவர்கள் நலனை பாதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.

9. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் -2ல்  ஒன்றிய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

10. இந்த ஆண்டில், ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும்.

11. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லல்படும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

12. தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.

13. நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும். கூடங்குளம் அணுமின் திட்டத்தில் செலவழித்த அணு எரிபொருளை நீக்க வேண்டும்.

14. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

Related Stories: