×

நீட் தேர்வு விலக்கு குறித்து ஒன்றிய அமைச்சரை நாளை சந்திக்க உள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். அப்போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவ பணியாளர்களின்  குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கொரோனாவினால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களில் 168 பேருக்கு ரூ.74.25 கோடி  தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.  இன்று, முன்களப் பணியாளராக பணியாற்றி கொரோனாவால் உயிரிழந்த 2 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள்  கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கிராமங்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.70 கோடியில், 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்கள் கிராமங்களுக்கு செல்ல உள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் 1 மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் என்ற அடிப்படையில் ஒரு வாகனம் அமைய உள்ளது. இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு, முதற்கட்டமாக 100 நடமாடும் மருத்துவ வாகனத்தை வரும் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், மருத்துவ தேவைகளுக்காக ஒன்றிய அரசுக்கு கடிதம், சந்திப்பு என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை  தமிழக சுகாதாரத்துறை சார்பில், டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை வைக்க உள்ளோம். பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரியை அமைக்க அனுமதி கோரவும், மேலும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் 50 மாணவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக கோரிக்கையும், அதேபோல் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமைக்கவும், மேலும் நீரிழிவு நோய்களுக்கான புதிய பட்டப்படிப்பு துறையை அமைக்க, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம்.  

27வது மெகா தடுப்பூசி முகாம்கள் வரும் சனிக்கிழமை நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படும். எனவே முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ள 50 லட்சம் நபர்களும் அதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் நீட் தேர்வில் விலக்கு பெற்றால் 100% வெற்றி  இல்லையெனில், மாணவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பேசினார்.

Tags : Union ,Neid ,Minister ,Ma. Subramanian , We are going to meet the Union Minister tomorrow regarding NEET exemption: Minister Ma Subramaniam Information
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...