×

வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க நடப்பாண்டு ரூ.10 கோடி அரசு நிதி ஒதுக்கீடு :அமைச்சர் ராமச்சந்திரன்

சென்னை : வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு  நிவாரணம் வழங்க நடப்பாண்டு ரூபாய்.10 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை,  சைதாப்பேட்டை பனகல் மாளிகையில்  உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் மாண்புமிகு   வனத்துறை     அமைச்சர்    திரு .கா.ராமச்சந்திரன் அவர்கள்  தலைமையில்      இன்று (31.03.2022)  வனத்துறைக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறை மண்டல வனப்  பாதுகாவலர்களுடன்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்   பேசும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்  அவர்களின் அறிவுறுத்தலின்படி, பசுமைத் தமிழகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில்  வனப்பரப்பை  33 சதவீதம்  உயர்த்திடவும், வன விலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதம் தடுக்கவும், வன விலங்குகள் மனித மோதல்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டுமென மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மண்டல வனப்  பாதுகாவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

நடப்பாண்டில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் மனிதர்கள் தாக்கப்படும்பொழுது ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க இரண்டு கட்டமாக இதுவரை ரூபாய்.10 கோடி அரசு நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு நிலுவையில்லாமல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் 73 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க ரூபாய்.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. தனியார் பட்டா நிலங்களில் அதிக அளவு மரக்கன்றுகளை வளர்க்க, விவசாயிகளை ஊக்கப்படுத்திட விவசாயிகள் வளர்க்கும் மரங்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றை வெட்டி விற்பதற்கான நடைமுறைகளையும் எளிமைப்படுத்த வேண்டும்.

வன விலங்குகளால் விவசாய பயிர்கள் பாதிப்பை தடுத்திட யானை புகா அகழிகள்,  மின்வேலிகள் அமைத்தல், காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளையும், மயில்கள் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை திட்டமிடுதல், பயிர்கள் இழப்பீட்டிற்கு முழுமையான நிவாரணம் வழங்குதல், வன விலங்குகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் வேட்டை தடுப்பு காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்தல், அவர்களுக்கான இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குதல் போன்ற பணிகளின் மூலம் பொதுமக்கள்  காடு வளர்ப்பில்  தாமாக முன்வந்து வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று   வனத்துறை அமைச்சர் திரு .கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வனத்துறை  முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்)  திரு. சையத் முஜம்மில் அப்பாஸ்,இ.வ.ப., முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் (தமிழ்நாடு கேம்பா) திரு.சுப்ரத் மஹபத்ரா, இ.வ.ப.,  கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் மீதா பானர்ஜி (விஜிலன்ஸ்), திரு.கே.கே.கௌசல் (சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்கம்), திரு,தெ.ஜனா (நிர்வாகம்),   திரு. ஏ.வெங்கடேஷ் (திட்டம் மற்றும் நிதி நிர்வாகம்), திரு.கிரிதர் (தகவல் தொழில் நுட்பம்), திரு.இ.அன்வர்தீன் (வனச் செயல் திட்டம்) அனைத்து மண்டல வனப்  பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறை  தலைமையிட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக TVS நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பு  சார்பாக ரூபாய். 20 லட்சம் மதிப்பில் ஆணைமலை, சத்தியமங்கலம், களக்காடு  ஆகிய மூன்று புலிகள் சரணாலயங்கள் பாதுகாப்பிற்காக 150 லேமினேட் லைட்ஸ், 30 பைனாகுலர் மற்றும் ஜிபிஸ் உபகரணங்களை அமைச்சர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் TVS நிறுவனத்தின் சமூக சேவை அமைப்பு தலைவர் திரு.ஸ்வரண்சிங் இ.ஆ.ப.இ(ஓய்வு), TVS நிறுவனத்தின்  இயக்குநர் திரு.ஆர்.சேகர், ஆலோசகர் திரு.ஸ்ரீதரன் மற்றும் வனத்துறை  தலைமையிட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Ramachandran , Wildlife, Vulnerabilities, Relief, Minister, K. Ramachandran
× RELATED ஜனவரியில் மட்டும் 1.37 லட்சம் வெளிநாட்டு...