சென்னை நந்தனத்தில் மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். சென்னை, நந்தனம், தமிழ்நாடு மின்னணு (ELCOT) நிறுவனத்தில் இன்று (31.03.2022) மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் அவர்கள் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்டுள்ள மின்னணு கொள்முதல் வலைத்தளத்தை (Procurement Portal) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நீரஜ் மித்தல், இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., செயல் இயக்குநர் திரு. எஸ். அருண்ராஜ், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) அரசின் தகவல் தொழில்நுட்ப  வன்பொருள் (Hardware) தயாரிப்புகளுக்கான விருப்பக் கொள்முதல் நிறுவனமாக செயல்படுகிறது.

எல்காட் நிறுவனம் அரசுத் துறைகளுக்கு தரமான மின்னணுப் பொருட்களை கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. எல்காட் நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உரிய நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கும், மின்னணு  மின் கொள்முதல் வலைத்தளத்தை எல்காட்  உருவாக்கியுள்ளது. இதுநாள் வரை கொள்முதல் சேவைகள் கடிதம் மற்றும் நேரடியாக வழங்கப்பட்டது. இந்த சேவையால் விலைப் பட்டியல் மற்றும் கொள்முதல் ஆணைகள் வழங்குவதற்கு சுமார் ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. தற்போது உடனடியாக கொள்முதல் மேற்கொள்ளப்படுவதுடன் மின்னணு வலைத்தளம் மூலம் பயனர் துறைகள் கொள்முதல் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த வலைத்தளம் மூலம் எல்காட் நிறுவனத்தின் பயனர் துறைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையேயான தொடர்புகள் மேம்படுவதுடன் எல்காட் நிறுவனத்தின் வணிகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயனர் துறைகள் மற்றும் விற்பனையாளர்களுக்காக பயிற்சி காணொலிகள் மற்றும் கையேடுகள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு பிரத்யேக தொழில்நுட்ப உதவி மைய ஆதரவு எண் 044-24333015 எல்காட் நிறுவனத்தால்  நிறுவப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு துறைகள் தங்களுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப வன்பொருட்களை கொள்முதல் செய்ய இவ்வலைத்தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: