கிறிஸ் ராக்கை அறைந்த பின், வில் ஸ்மித் அரங்கில் இருந்து வெளியேற மறுத்துவிட்டதாக ஆஸ்கர் அகாடமி விளக்கம்!!

வாஷிங்டன்: ஆஸ்கர் விருது விழா மேடையில் நடிகர் கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் அறைந்தது குறித்து ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் கடந்த திங்கட்கிழமை நடந்தது. விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். விழாவின்போது, அங்கிருந்த நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் ஹேர்ஸ்டைல் குறித்து, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். வில் ஸ்மித்தின் மனைவி ஜடா, அலோபெசியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற மொட்டை தலை நடிகையின் கேரக்டருடன் இணைத்து கிறிஸ் ராக் கிண்டலடித்தார். உடனே மேடைக்கு வந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். உனது வாயால் என் மனைவியின் பெயரை சொல்லாதே என கிறிஸ் ராக்கை பார்த்து சத்தமிட்டு கூறினார் வில் ஸ்மித்.

இதையடுத்து மறுநாளே கிறிஸ் ராக்கை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முறையான வில் ஸ்மித்திடம் விசாரணையை தொடங்கியிருப்பதாக ஆஸ்கர்  அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. கிறிஸ் ராக்கை அறைந்த பின்,வில் ஸ்மித்திடம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது என்றும் ஆனால் அரங்கில் இருந்து வெளியேற வில் ஸ்மித் மறுத்துவிட்டதாகவும் அகாடமி தெரிவித்துள்ளது. அகாடமியின் நடத்தை விதிகளை மீறியதால் வில் ஸ்மித்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொண்டதாகவும் ஆஸ்கர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வரும் 18ம் தேதி தலைமை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் வில் ஸ்மித் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் ஆஸ்கர் அகாடமி கூறியுள்ளது.

Related Stories: