×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மண்பானை விற்பனை ஜோர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மண்பானை விற்பனை விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.  பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், கடந்த ஆண்டில் ஜூன் முதல் தொடர்ந்து சில மாதமாக பருவமழை பெய்தது. பின், வடகிழக்கு பருவமழையும் அடுத்து பெய்தது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றிபோனது. இதில், பிப்ரவரி மாதம் துவக்கத்திலிருந்து  மழையின்றி வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது. அதிலும், இந்த  மாதம் துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமானது. இதையடுத்து, பல கிராமங்களில் மண்பானை உற்பத்தியில் தீவிரம் காட்டினர்.

சுற்றுவட்டார கிராமங்களாக அங்கலகுறிச்சி,ரங்கசமுத்திரம், ஆவல்சின்னாபாளையம்,பொன்னாபுரம்,வடுகபாளையம், வடக்கிபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில், மண்பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களில் தயாரிக்கப்படும் மண்பானைகள் தற்போது, மார்க்கெட்டில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. மேலும், நகரின் பல வீடுகளில் நேரடி விற்பனையும் செய்து வருகின்றனர்.

50 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அளவிற்கு தகுந்தார்போல் மண்பானைகள் விலை போகிறது. ரோட்டோரத்திலும் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானைகளை அடுக்கி வைத்து விற்பனையை துவங்கியுள்ளனர். இதனை வெளியூர்வாசிகள் அதிகம் வாங்கி செல்கின்றனர். அக்னி நட்சத்திரத்தை போல் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மண்பானைகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Weil , Veilin, impact, clay, sale
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்