×

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி: கிலோ ₹5க்கு விற்பனையால் விவசாயிகள் கவலை

வேலூர்: வேலூர் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ₹5க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. அதனால் வரத்து பாதிக்கப்பட்டு அனைத்து காய்கறிகள் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தன.

இந்நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக மழை குறைந்தபோதும், பனியின் தாக்கம் அதிகம் காரணமாக வரத்து குறைந்து காணப்பட்டதால் தக்காளி ஒரு கிலோ ₹30 வரை விற்பனையானது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனால் நாள்தோறும் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. வரத்து அதிகம் காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது.

நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று ஒரு பெரிய பெட்டி தக்காளி ₹200க்கு விற்பனையானது. ஒரு கிலோ ₹5 முதல் ₹7 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: வேலூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், வேலூர் மாவடத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு போதிய மழையால் தக்காளி செடியில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. வழக்கத்தை விட அதிக விளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை, பனி குறைந்ததால் தக்காளி செடிக்கு ஏற்ற தட்பவெப்பநிலையென அளவான வெப்பம் காணப்படுகிறது.

இதனால் சேதமின்றி விளையும் தக்காளிகள் அனைத்தும் மார்க்கெட்டிற்கு அனுப்பும் தரத்தில் உள்ளன. தினமும் மார்க்கெட்டிற்கு வழக்கத்தைவிட அதிக அளவில் தக்காளி கொண்டுவரப்படுவதால் விலை குறைந்து விற்பனையாகிறது. இந்தநிலை நீடித்தாலே தக்காளி பயிரிட, பராமரிப்புக்கான செலவு, மார்க்கெட்டிற்கு வாகனங்கள் கொண்டுவரும் செலவு, சுங்ககட்டணம், கமிஷன் தொகை அனைத்தையும் கழித்துப் பார்த்தால் மிச்சமாவது ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர்கள் வேதனையுடன் கூறினர்.

Tags : Velur Netaji , Netaji Market, Tomatoes, Prices, Fall
× RELATED வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு