உலகம் வெப்பமாதலை தடுக்க மாணவர்கள் சைக்கிள் பயன்படுத்த வேண்டும்: ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பேச்சு

மாமல்லபுரம்: உலகம் வெப்பமாவதை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவர்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என ஐநா சபை முன்னாள் பொது செயலாளர் கூறினார். உலகளவில் கார்பன் வெளியேறுவதை தடுப்பது குறித்த ஒருநாள் கருத்தரங்கம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. தேசிய பசுமை தீர்ப்பாய முன்னாள் உறுப்பினர் ஜோதிமணி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நிர்வாகிகள் கணேசன், அனுராதா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஐநா சபை முன்னாள் பொது செயலாளர் எரிக் சொல்ஹெய்ம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது.

உலகம் அதிகளவில் வெப்பமாவதால் நிறைய பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகளவில் மரம் வளர்க்க வேண்டும். சீன நாட்டில் வெப்பத்தை குறைக்க பெட்ரோல், டீசல் வாகனங்களை தவிர்த்து எலக்ட்ரிக்கல் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிகளவில் வெப்பமாவதால் ஓசோன் படலம் கடுமையான பாதிப்பை சந்திக்கும். இதனால், மனிதர்களாகிய நாம் பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வழக்கத்தை விட 3 மடங்கு அதிக மரங்களை நட்டு பசுமையாக பராமரிக்கின்றனர்.

பிளாஸ்டிக், பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளில் வந்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில், கடலில் உள்ள சுண்ணாம்பு பாறை அதிக வெப்பத்தால் சேதமடைந்துள்ளதாக ஒரு அறிக்கை வந்துள்ளது. இப்படி, தொடர்ந்து நிகழும்போது கடலில் உள்ள உயிரினங்கள் உயிரிழக்க நேரிடும். சென்னையில், அதிக வெப்பத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கம்பெனிகள் மற்றும் சென்னை சாலை ஓரங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக மரங்களை நட்டு பசுமையாக பாதுகாக்க முன்வர வேண்டும்’ என்றார். 

Related Stories: