×

மாநில அரசு கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு கல்வி அமைச்சர்களுக்கு யுஜிசி தலைவர் கடிதம்

புதுடெல்லி: மாநில அரசின் கல்லூரிகளிலும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திட வலியுறுத்தி அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத இருப்பதாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறி உள்ளார். நாட்டில் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர, ‘கியூட்’ எனப்படும், பல்கலை பொது நுழைவுத் தேர்வு, நடப்பு கல்வியாண்டில் இருந்து நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு விண்ணப்பம் அடுத்த மாதம் 2ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த பொது நுழைவுத்தேர்வை மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்தலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. அதே சமயம், பொது நுழைவுத்தேர்வு திட்டத்தில் இணையுமாறு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மாநில கல்வி அமைச்சர்களுக்கும் அவர் கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக மானிய குழுவின் (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கூறுகையில், ‘‘ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், கியூட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பல தனியார் பல்கலைகளும், கியூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள முன் வந்துள்ளன. இது தொடர்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுக்கு கடிதம் எழுத உள்ளேன்.

அதிக அளவில் மாணவர்கள் பயன்பெறும் வகையில்  மாநில அரசின் நிதியுதவியில் செயல்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் சந்தித்து பேசுவேன். முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் 25 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தினேன். கியூட் தேர்வுக்கு குஜராத் பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதே போல் அசாம், கர்நாடகாவை சேர்ந்த துணைவேந்தர்களையும் விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்றார்.



Tags : UGC ,President ,Ministers ,State Government Colleges and ,Public Entrance Education , State Government College, General Entrance Examination, UGC
× RELATED ராகிங்கை தடுக்காவிட்டால் நடவடிக்கை...