×

அப்போலோவிலேயே 70 சதவீதம் அதிநவீன முறையில் இதய சிகிச்சை: மருத்துவமனை குழுமம் பெருமிதம்

சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து அதிநவீன மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகளில், 70% அப்போலோ மருத்துவமனையிலேயே செய்யப்பட்டுள்ளன என அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி தெரிவித்துள்ளார். ஆசியாவிலேயே முதன்முறையாக, இதய பிரச்னைகளுக்காக உடலினுள் பொருத்தப்படும் மிட்ராக்ளிப்  மற்றும் டிரான்ஸ்கத்தீட்டர் ஆர்டிக் வால்வு ரிபிளேஸ்மென்ட் எனப்படும் டிவிஆர் ஆகிய இரு உள்சாதனங்களை ஒரே நோயாளிக்கு பொருத்தி மற்றொரு முக்கியமான சாதனையை படைத்துள்ளது அப்போலோ மருத்துவமனை.

இதுகுறித்து, டாக்டர் சதீஷ் கூறியதாவது:
நான்கு ஆண்டுகளாக மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகள் மற்றும் டிஏவிஆர் போன்ற அதி நவீன மருத்துவ கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் அப்போலோ மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சிகிச்சையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது ஆழ்ந்த அனுபவமும், மருத்துவமனையின் அதிநவீன உள்கட்டமைப்பும், மருத்துவ ஆதரவு சேவையும் தான் நோயாளியின் உயிரை காக்கும் டிஏவிஆர் மற்றும் மிட்ராக்ளிப் ஆகிய இரண்டையும் மேற்கொள்ள செய்து அவரது இரு வால்வுகளையும் சரி செய்ய உதவியது. மேலும் மிட்ராக்ளிப் சாதனத்தை பயன்படுத்தி அதை உள்ளே பொருத்தி மிட்ரல் வால்வை சரி செய்தோம். இதற்கு பிறகு, 3 மிட்ராக்ளிப் மற்றும் 9 டிஏவிஆர் சிகிச்சைகளை மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒரு சில நோயாளிகளுக்கும் வெறும் 24 மணி நேரத்தில் செய்து முடித்தோம்.

இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறியதாவது: ஒரே நோயாளிக்கு மிட்ராக்ளிப் மற்றும் டிஏவிஆர் சிகிச்சையை தடையின்றி அளிக்கும் ஆற்றலில் ஆசியாவிலேயே முதன்முறையாக ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டியது பெருமைக்குரிய ஒன்றாகும். வயது மற்றும் பிற காரணங்களால் அதிக ஆபத்து காரணமாக திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு செல்ல முடியாத நோயாளிகளின் உயிரை காப்பாற்ற இந்த சிகிச்சை முறைகள் உதவுகின்றன.  இன்றுவரை இந்தியாவில் உள்ள அனைத்து மிட்ராக்ளிப் சிகிச்சை முறைகளில், 70 சதவீதம் அப்போலோ மருத்துவமனையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Apollo, 70 percent, heart treatment
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...