×

மகளிர் உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியா

வெலிங்டன்: ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா 7வது முறையாக தகுதி பெற்றது.
பேசின் ரிசர்வ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.   மழை காரணமாக  ஆட்டம் தாமதமாகத் தொடங்கியதால் ஓவர்களின் எண்ணிக்கை 45 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆஸி. தொடக்க வீராங்கனைகள் ரேச்சல் ஹெய்ன்ஸ் - அலிஸா ஹீலி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 216 ரன் சேர்த்தனர்.  அலிஸா 129 ரன் (107 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்),   ரேச்சல் 85 ரன் (100 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஆஷ்லி கார்ட்னர் 12 ரன்னில் வெளியேறினர்.

ஆஸி. 45 ஓவர் முடிவில்  3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. கேப்டன்  லான்னிங் 26*,  பெத் மூனி 43* ரன்னுடன் கடைசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து 306 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 37 ஓவரில் 148 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 48, ஹேலி மேத்யூஸ், டோட்டின் தலா 34 ரன்  எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர்
காயம் காரணமாக அகாலியா ஹென்றி, அனிசா முகமது களமிறங்கவில்லை.  

ஆஸி. தரப்பில் ஜெஸ் 2, மேகன் ஷுட், அன்னபெல் சதர்லேண்டு, டாலியா மெக்ரத், அலனா கிங், ஆஷ்லி கார்ட்னர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம்  ஆஸி 7வது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ளது.  ரவுண்ட் ராபின் லீக் அடிப்படையில் நடந்த முதல் 2 உலக கோப்பை தொடர்களிலும் கூட (1973 & 1978) அந்த அணி புள்ளிகள் அடிப்படையில் முறையே 2வது மற்றும் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸி. அணி இதுவரை 6 முறை உலக கோப்பையை முத்தமிட்டுள்ளதுடன், 7வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஏப்.3ம் தேதி நடைபெறும் பைனலுக்காக காத்திருக்கிறது.

Tags : Australia ,Women's World Cup Final , Women's World Cup Final, Australia
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...