கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீனவர்களை பூட்ஸ் காலால் தாக்கி வலை, செல்போன் பறிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

வேதாரண்யம்: கோடியக்கரை அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகள், செல்போனை பறித்து சென்றனர். தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்திலிருந்து பைபர் படகில் சதீஷ் (30), ஆறுமுகம் (30), தமிழ்செல்வன் (31) ஆகிய 3 மீனவர்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்றுமுன்தினம் மதியம் மீன்பிடிக்க சென்றனர். அப்போது நள்ளிரவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 20 பேர், தமிழக மீனவர்கள் 3 பேரையும் தாக்கியதோடு பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வலைகளையும் சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த செல்போன், லைட், மற்றும் மீன்பிடி பொருட்களை பறித்து சென்றனர்.

இந்த தாக்குதலில் உள்காயம் அடைந்த 3 மீனவர்களும் நேற்று மதியம் கோடியக்கரை வந்து சேர்ந்தனர். பின்னர் 3 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி குமார் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: