×

திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டரின் காரில் ரூ.40 லட்சம் சிக்கியது: சென்னை செல்லும் வழியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

விழுப்புரம்: திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டரின் காரில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் பணம் சிக்கியது. சென்னைக்கு சென்ற போது, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை மறித்து சோதனையிட்டதில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வருபவர் சரவணகுமார்(52). நேற்று இவர் தனக்கு காரில் சென்னை நோக்கி பயணித்தார். மணி என்பவர் காரை ஓட்டினார். அவரது காரில் கட்டுக்கட்டாக பணம் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் மாவட்ட எல்லையான கெடிலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துணை கலெக்டர் சரவணகுமார் வந்த காரை மறித்து சோதனையிட்டனர்.

காரில் அவரது  இருக்கையின் அருகில் இருந்த கட்டை பையில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் இருந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே துணை கலெக்டர் சரவணகுமார் மற்றும் டிரைவர் மணி ஆகியோரை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
 அப்போது,  பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் சென்னையில் உயர் அதிகாரிகளுக்கு  கொண்டுசெல்லப்பட்டதா என்று பல கேள்விகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் துருவி, துருவி கேட்டனர். அதற்கு சரவணகுமார் சரியாக பதில் அளிக்கவில்லை.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விடுதிகளில் சமையலர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு  ஆள் தேர்வு நடைபெற உள்ளதாகவும், அதற்கு ஒவ்வொரு பணியிடங்களுக்கும் வசூல் வேட்டை நடந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே இது லஞ்சப் பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்து, இவரது நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னை செல்லும் வழியில் பணத்துடன் சிக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து டிரைவர் மணியிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க கொண்டு சென்றதாக ஒப்புதல்:
விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய திருச்சி மாவட்ட துணை கலெக்டர் சரவணகுமாரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சரவணகுமார் பின்னர், சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் கலைமோகனுக்கு லஞ்சமாகக் கொடுக்க கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

Tags : Trichy Adithravidar ,Chennai , 40 lakh in the car of Trichy Deputy Collector
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...