×

கந்துவட்டி நிலைக்கு மாறும் நுண்நிதி நிறுவனங்கள்

நன்றி குங்குமம் தோழி

தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட நுண்நிதி நிறுவனங்கள் (micro finance) செயல்பட்டு வருகின்றன.  இதில் பெண்கள் தங்கள் குடும்பச்
செலவுகளுக்காக, குறிப்பாகக் கல்வி, விவசாயம், மருத்துவம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் பெறுகின்றனர். இதில் மார்ச் மாதம் இறுதியில் ஏற்பட்ட கொேரானா ஊரடங்கில் வீட்டுவேலை, விவசாயம், கட்டுமானம், ஜவுளி, பட்டாசு, பீடி, மீன்பிடி, தெருவோர வியாபாரம், பின்னலாடை போன்ற அனைத்து சிறு குறு தொழில்களும் முடங்கி நிற்க, மக்கள் வேலை இழந்து வருமானமின்றி அல்லல் படத் தொடங்கினர். இந்நிலையில் நுண்நிதி நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த கடனை வசூலிப் பதற்காக கடன் பெற்றவர்களிடத்தில் கடுமையான முறையில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கியது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் ஆகஸ்ட் 31 வரை கடன் மற்றும் வட்டியை வசூல் செய்ய கால அவகாசம் கொடுத்து வழிகாட்டியதோடு, மாவட்ட ஆட்சித் தலைவர்களும் ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமல் மீறும் நிதி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் நுண்நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி குழு தலைவர்களைக் கொண்டு கடன் வசூலில் ஈடுபடுவதோடு, வட்டியைக் கூடுதலாக கட்டவும் நிர்பந்திக்கின்றனர்.

கடன் பெற்றவர்களை அடியாட்களை வைத்து மிரட்டுவது, கடன் அட்டையில் ரெட், பிளாக் மார்க் செய்வதன் மூலம் வேறு வங்கிகளில் கடன் பெற முடியாதென சொல்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதோடு, சிலர் இரவு 11 மணி வரை வீட்டு வாசலிலே அமர்ந்து பணத்தை கட்டச் சொல்லியும் பெண்களை நிர்பந்திக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து எழுந்துள்ளது. சமீபத்தில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து எளிய மக்களை சுரண்டும் நுண்நிதி நிறுவனங்கள் குறித்து ஆன்லைன் இணைய வழிப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இது குறித்து பெண்கள் கூட்டமைப்பில் பொறுப்பில் இருக்கும் சிலரிடமும், பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடமும் பேசியபோது…

ஷீலு, மாநிலத் தலைவி பெண்கள் இணைப்புக் குழு

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை (nationalised bank) அத்தனை எளிதில் அணுகிவிட முடியாது. ஆனால் இந்த நுண்நிதி நிறுவனங்கள் (micro finance) பெண்களை குழுக்களாக மாற்றி குழுவில் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் கடன் கொடுத்து, கடன் தொகையினை தவணை முறையில் வட்டியுடன் வசூலிக்கின்றன.  ஒரு குழுவில் 5 அல்லது 6 பெண்கள் சேர்ந்தாலே 50 முதல் 1 லட்சம் வரை எளிதாக வீட்டு வாசலில் வைத்தே பணத்தை கொடுத்து விடுகின்றனர். இதன் காரணமாக இத்தகைய தனியார் நிதி நிறுவனங்களிடம் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர்.

குறிப்பாக கிராமத்தில் உள்ள பெண்களை குழுவாக ஒருங்கிணைக்கும்போது பெரும்பாலும் குழுவுக்குள் உறவினர்களாகவே இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் தவணைத் தொகையை செலுத்தத் தவறினால், குழுவில் இருக்கும் மொத்த பெண்களிடம் இருந்தும் குறிப்பிட்ட பெண்ணிற்கு நெருக்கடிகள் வருகிறது. உறவினர்களே சேர்ந்து குறிப்பிட்ட பெண் குடியிருக்கும் வீட்டை பூட்டுவது, வீட்டில் இருக்கும் அவரது பொருட்களை விற்று செலுத்த வேண்டிய பணத்தை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நிதி நிறுவனங்களும் தொடர்ந்து அப்பெண்ணிற்கு போன் செய்து நெருக்கடிகளைத் தருவதோடு கந்து வட்டிக்காரர்களைப்போல் மிகவும் கேவலமான நடவடிக்கைகளை கையாளுகின்றனர்.

தாங்க முடியாத நெருக்கடியில், ஒரு நுண்நிதி நிறுவனத்தில் நிதியினைப் பெற்று மற்றொரு நிதி நிறுவனத்தில் கடனை அடைக்கும் நிலைக்கும் சிலர் செல்கிறார்கள். இப்படியே மாறி மாறி கடன் பெற்று, கந்துவட்டி நிலையைவிட மோசமான நிலையை அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் கடன் பெற்றவர் ஊரைவிட்டு ஓடும் அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஜூன், ஜூலை மாதங்களில் நிதி நிறுவனங்களின் நெருக்கடி ரொம்பவே அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் பல்வேறு நுண்நிதி நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை, கொல்கத்தா, டில்லி, ஹைதராபாத், பெங்களூர், கோட்டயம், கொச்சி என பல்வேறு நகரங்களில் செயல்படுகிறது. இவர்கள் தங்கள் செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையின்றி, கிராமப்புறங்களைச் சேர்ந்த எளிய மக்களை குறி வைத்தே நகர்த்துகின்றனர். படிப்பறிவு இல்லாத அவர்களை எளிதில் அணுகி, விரிவாக எதையும் விளக்காமல் கடன் தொகையை உடனடியாக வழங்கிவருகின்றனர். தவணை மாதங்கள் குறைந்தாலும் இவர்கள் மொத்த கடனுக்குமான வட்டித் தொகையினையே கடைசிவரை வசூலிப்பதோடு. கடன் பெற்றவர்களிடத்தில் காப்பீடு குறித்தும் தெரிவிப்பதில்லை. ஒருவேளை கடன் பெற்றவர் இறந்தால் அவர்களின் காப்பீட்டுத் தொகையினை நிதி நிறுவனமே எடுத்துக் கொள்கிறது.

இத்தகைய நுண்நிதி நிறுவனங்களை ஆந்திரா அரசாங்கம் ஒரு வரம்புக்குள் கொண்டுவந்து ஆணை பிறப்பித்துள்ள காரணத்தால் அங்கிருந்து பல நுண்நிதி நிறுவனங்கள் தமிழகத்திற்குள் நுழைந்து கடை விரித்திருக்கிறது. இவை பெரும்பாலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களை குறிவைத்து இயங்கி வருகின்றன. தமிழக அரசும் இத்தகைய நுண்நிதி நிறுவனங்கள் செயல்பாட்டில் தலையிட்டு, வரைமுறைப்படுத்தி மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

பழனி பாரதி, அமைப்புச் செயலாளர், விருதுநகர் மாவட்ட பெண் தொழிலாளர்கள் சங்கம் மைக்ரோ பைனான்ஸ் என்பது பெண்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்டதே. பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் திட்டமிட்டு சரியான முறையில் திருப்பிக் கட்டிவிடுவார்கள் என்ற முறையில், அவர்களை குழுக்களாக மாற்றி நுண்நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால் பெண்கள் இதில் சிக்கி மிக மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, மனரீதியான துன்பங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

எங்கள் அமைப்பில் அனைத்துவிதமான பணிகளில் இருக்கும் அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராய் உள்ளனர். இவர்கள் கொரோனா நோய் தாக்கத்திற்கு முன்புவரை பணிகளுக்கு சென்று ஊதியம் பெற்றவர்கள். தங்கள் குடும்பத் தேவைகளை சமாளிக்க நுண்நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மாதத் தவணையில் சரியான முறையில் செலுத்தி வந்தனர். ஆனால் கொரோனாவிற்குப் பின் அனைவரும் வேலையிழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களில் நூற்றில் 90 சதவிகிதம் பெண்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

தெருவோர வியாபாரிகள் நிலையும் இதுவே. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களிலும் 30 சதவிகிதம் தவிர்த்து 70 சதவிகிதம் பெண்கள் வேலை இழந்துள்ளனர். அரசாங்கம் தரும் உதவித் தொகையும் 60 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு தவிக்கும் இந்தப் பெண்கள், நுண்நிதி நிறுவனங்களில் பெற்ற பணத்தை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நிகழ்கிறது.

எங்கள் அமைப்பில் இருக்கும் பெண் தொழிலாளர்கள் நிதிநிறுவனங்கள் மூலமாகத் தங்களுக்கு மிரட்டல்கள் வருவதாகத் தங்கள் பிரச்சனையைக் குரல் பதிவு செய்து உதவி கோரியுள்ளார்கள். கணவன், மனைவி இருவருமே வேலையிழந்து வருமானமின்றி தவிக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியும், அரசும் இதில் தலையிட்டு நுண்நிதி நிறுவனங்களை முறைப்படுத்தி, கடன் தொகையை திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை 2021 வரை நீட்டித் தர வேண்டும் என்பதே எங்களில் பெரும்பாலானவர்களின் கோரிக்கை.

அமைப்பு சாரா பெண்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு தமிழக  அரசு கடன்களை தள்ளுபடி செய்ய ஆவன செய்வதோடு, இதற்கென குறைதீர்க்கும் மையம் ஒன்றையும் உருவாக்கி புகார்கள் பதியப்பட்டு சரியான முறையில் விசாரித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறார் இவர். விஜயலெட்சுமி, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் குழுத் தலைவிவாழ்வதற்கு வழியே இல்லை எனும்போது எங்கிருந்து கடன் கட்ட முடியும். நாங்கள் முடியாது என்று சொல்லவில்லை. எங்களுக்கு வழியில்லை என்கிறோம். மக்கள் நடமாட்டம் இருந்தால்தானே வருமானம் இருக்கும்.

கடந்த 21 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். இரண்டு பெண்கள் குழுக்களுக்கு நான் தலைவி. மார்ச் மாதம் வரை உள்ள தவணையை அனைவருமே குழுவில் கட்டிவிட்டோம். ஊரடங்கில் ஏப்ரல், மே மாதங்களில் வருமானமின்றி வீட்டுக்குள் முடங்கினோம். ஆகஸ்ட் 30 வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு கொடுத்து அதற்கும் சேர்த்து கூடுதலாக 4% வட்டி போட்டுள்ளார்கள். அதையும் ஏற்றுக் கொண்டோம்.

மார்ச் 25ல் இருந்து எனக்கு ஆட்டோ ஓடவில்லை. கடந்து பத்து தினங்களாகத்தான் ஓடுகிறது. இதில் ஏப்ரல், மே மாதங்களில் வங்கிகள் எங்களைத் தொந்தரவு செய்யவில்லை. ஜூன் மாதம் தொடங்கியதுமே ஆரம்பித்துவிட்டார்கள். பணம் வசூலிப்பதற்காக குழுவில் இருப்பவர்களில் யாரெல்லாம் பலகீனமாக இருக்கிறார்களோ அவர்களின் வீட்டிற்கே சென்று சந்திப்பது, முடிந்த அளவு அவர்களை டார்ச்சர் செய்து அவமானப்படுத்துவது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என அழுத்தமாகப் பதிவு செய்து முடித்தார்.

இப்ரஹீமா:

எனக்கு வயது 46. வீட்டு வேலைகள் செய்து வருமானம் ஈட்டுகிறேன். கணவர் தட்டுவண்டி வைத்து அதில் சுமை ஏற்றி இறக்கும் வேலை செய்கிறார். எனக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள். மகளை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.ஸி. நர்ஸிங் படிக்க வைக்கிறேன். படிப்பிற்காக பதினைந்தாயிரம்  கட்டியதுபோக விடுதிக்கு மாதம் 1500 கட்ட வேண்டும். இதற்காக குழு மூலமாக தனலெட்சுமி வங்கியில் பிப்ரவரி மாதம் 50 ஆயிரம் கடன் பெற்றேன்.

மாதத் தவணை 2700 வீதம் 2 வருடம் கட்ட வேண்டும். மார்ச் மாத தவணையை மட்டும் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கு நெருக்கடியில் வீட்டு வேலைக்குச் செல்வதற்கு தடை ஏற்பட்டது. என் கணவருக்கும் வேலை இல்லை. இருவருக்கும் வருமானம் இல்லாத நிலையில் மாத தவணையை கட்ட முடியவில்லை. ஜூலை மாதம் வங்கியில் இருந்து வந்து தவணைத் தொகையை மொத்தமாய் கட்டச் சொல்லிக் கேட்டார்கள்.

நான் வங்கி மேலாளரிடம் கால நீட்டிப்பு தரச் சொல்லிக் கேட்டும், அவர் கூட்டம் நடக்கும் இடத்தில் பொதுவில் வைத்து என்னிடம், ‘கொரோனாவில் பாதிக்கப்பட்டு செத்தா போனீங்க..உயிரோடதான இருக்கீங்க.. சாப்புடுறதுக்கு மட்டும் உங்களுக்கெல்லாம் காசு இருக்கா’ போன்ற தரக்குறைவான வார்த்தைகளால் பலர் முன்னிலையில் என்னை அசிங்கப்படுத்தினர்.

ராஜலெட்சுமி

25000ம் கடன் வாங்கி இரவு டிபன் கடை போட்டு இருந்தேன். மாதம் 1650 வீதம் 26 மாதம் கட்ட வேண்டிய தவணைத் தொகையில் 15 மாதம் கட்டிவிட்டேன். கொரோனா ஊரடங்கில் மீதி தவணைத் தொகையை என்னால் கட்ட முடியவில்லை. உடனே கட்டச் சொல்லி எனக்கு நெருக்கடி தருகிறார்கள். வருமானம் இல்லாததால் என்னால் அந்தப் பணத்தை வட்டியோடு கட்ட முடியவில்லை. தொடர்ந்து என்னை தொந்தரவு செய்து வருகிறார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Microfinance institutions ,
× RELATED மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம்...