×

சென்னை மாநகராட்சியின் 15 மண்டல தலைவருக்கான தேர்தல் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு

சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலத்துக்கான தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில், திமுக வேட்பாளர்களை எதிர்த்து 14 மண்டலங்களில் யாரும் போட்டியிடாததால் 14 மண்டலங்களிலும் தலைவராக திமுக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு மண்டலத்தில் மட்டும் அதிமுக போட்டியிட்டது. அதிலும் திமுக வெற்றி பெற்றது. அதேபோல, தமிழகம் முழுவதும் நடந்த மண்டல குழு தலைவர் பதவிகளை திமுக வேட்பாளர்கள் மொத்தமாக கைப்பற்றினர்.
 
சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட தேர்தலில் 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், காங்கிரஸ் 13 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4 இடங்களிலும், மதிமுக 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அதிமுக 15 இடங்களிலும், தனித்து போட்டியிட்ட பாஜ, அமமுக தலா ஒரு இடங்களிலும், 5 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
 அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியாவும், துணை மேயராக மகேஷ்குமார் கடந்த மாதம் 4ம் தேதி பதவியேற்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 15 மண்டலத்துக்கான தலைவர் மற்றும் ஆறு நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

 அதன்படி, மறைமுகத் தேர்தல் ரிப்பன் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் பேடி முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
 சென்னை மாநகராட்சியின் 15 மண்டல தலைவருக்கான வேட்பாளர்கள் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,  மண்டலம்-1 (திருவொற்றியூர்) தி.மு.தனியரசு, மண்டலம்-2 (மணலி)  ஏ.வி.ஆறுமுகம், மண்டலம்-3 (மாதவரம்) எஸ். நந்தகோபால், மண்டலம்-4  (தண்டையார்பேட்டை) - நேதாஜி யு.கணேசன், மண்டலம்-5 (ராயபுரம்) - பி.  ராமுலு, மண்டலம்-6 (திரு.வி.க.நகர்) சரிதா மகேஷ்குமார், மண்டலம்-7  (அம்பத்தூர்) பி.கே.மூர்த்தி, மண்டலம்-8 (அண்ணா நகர்) கூபி ஜெயின்,  மண்டலம்-9 (தேனாம்பேட்டை) - எஸ்.மதன்மோகன், மண்டலம்-10 (கோடம்பாக்கம்) -  எம். கிருஷ்ணமூர்த்தி, மண்டலம்-11 (வளசரவாக்கம்) - நொளம்பூர் வே.ராஜன்,  மண்டலம்-12 (ஆலந்தூர்) என்.சந்திரன், மண்டலம்-13 (அடையார்) ஆர். துரைராஜ், மண்டலம்-15  (சோழிங்கநல்லூர்) வி.இ.மதியழகன்.

 இந்த வேட்பாளர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் திமுக வேட்பாளர்களே தேர்வு செய்யப்பட்டனர். மண்டலம் 14ல் மட்டும் திமுக வேட்பாளராக எஸ்.எஸ்.ரவிச்சந்திரனை எதிர்த்து, அதிமுக சார்பில் சதீஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். எனவே, இந்த மண்டலத்துக்கு மட்டும் தேர்தல் நடந்து வருகிறது. இந்த மண்டலத்தை பொறுத்தவரை மொத்தம் உள்ள 11 கவுன்சிலர்களில் 8 பேர் திமுக கவுன்சிலர்கள், 3 பேர் அதிமுக கவுன்சிலர்கள். திமுகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் இதிலும் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எஸ்.ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார்.

    இதை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணிக்கு கணக்குகள் மற்றும் தணிக்கை, கல்வி, அறிவொளி, விளையாட்டு, பூங்கா, சுகாதாரம் மற்றும் குடும்பநலம், வரி விதிப்பு மற்றும் நிதி, நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் ஆகிய ஆறு நிலைக் குழுகளுக்கு தலா 15 உறுப்பினர்கள் என 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கணக்கு குழு தலைவராக கே.கே.நகர் தனசேகரன், பொது சுகாதாரக் குழு தலைவராக சாந்தகுமாரி, கல்விக் குழு தலைவராக பாலவாக்கம் த.விசுவநாதன், வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக சர்பஜெயாதாஸ் நரேந்திரன், நகரமைப்புக் குழு தலைவராக தா.இளைய அருணா, பணிகள் குழு தலைவராக நே.சிற்றரசு, நியமனக்குழு உறுப்பினராக ராஜா அன்பழகன், சொ.வேலு ஆகியோர் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மாநிலம் முழுவதும் மண்டலக் குழு தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர்களே அதிக இடங்களை பிடித்தனர். மாநகராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தமாகவே திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின.

Tags : Chennai Municipality , Chennai Corporation, Regional Chairman, Election, DMK, Candidates
× RELATED மக்களவைத் தேர்தலையோட்டி காவலர்கள்...