×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் திறப்பதற்காக வேதாந்தா நிறுவனம் பல்வேறு குறுக்கு வழிகளில் முயற்சித்து வருவதும், பணத்தை வாரியிறைத்து ஆலைக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கத்தையும், செயற்கையாக ஒரு அணிதிரட்டலையும் உருவாக்க முயற்சித்து வருவதுமான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. எனவே வேதாந்தா நிறுவனத்தின் சூழ்ச்சிக்கெதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தியும் தூத்துக்குடி, பாத்திமா நகர் மக்கள் நடத்தியப் போராட்டம் குறித்தான செய்தி அறிந்தேன்.

அப்போராட்டத்தை முழுமையாக நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது என்று கூறினார். அம்மக்களது கோரிக்கை மிக நியாயமானது, தார்மீகமானது மற்றும் தமிழர்களின் உயிரைக் குடித்து, சூழலைக் கெடுத்த நாசகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை மனநிலையாக இருக்கிறது. ஆகவே மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேதாந்தா குழுமத்தின் சதிச்செயலை முறியடிக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சட்டப்பேரவையில் சிறப்புச் சட்டமியற்ற வேண்டுமெனவும், ஆலையை அரசுடைமையாக்கி காப்பர் தயாரிக்கும் உலைகளை முழுமையாகச் செயலிழக்க செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.

Tags : Seaman , Special legislation should be enacted to close Thoothukudi Sterlite plant permanently: Seaman insists
× RELATED சொல்லிட்டாங்க…