×

வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள கடையில் சிலந்தி விழுந்த சிப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி: அதிகாரிகள் ஆய்வுக்கு கோரிக்கை

வேலூர்: வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள கடையில் சிலந்தி விழுந்த சிப்ஸ் சாப்பிட்ட 2 பேருக்கு வாந்தி ஏற்பட்டது. எனவே கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாநகரில் உள்ள பெரும்பாலான பேக்கரி, ஸ்வீட் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதிகள் குறிப்பிடுவதில்லை. மேலும் சுகாதாரமற்ற முறையிலும் தின்பண்டங்கள், சிப்ஸ், மிக்சர் உள்ளிட்ட கார வகைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் உள்ளது.

இந்நிலையில், வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள ஒரு கடையில் நேற்று சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது 2 நண்பர்கள் சிப்ஸை சாப்பிட்டு கொண்டிருந்தனர். திடீரென சிப்ஸில் சிலந்தி பூச்சி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிப்ஸ் சாப்பிட்ட 2 வாலிபர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். இதையடுத்து அவர்கள், கடைக்காரரிடம் சென்று கேட்டபோது சரிவர பதில் அளிக்கவில்லையாம்.

மேலும் இந்த விஷயம் சிறிது நேரத்தில் சைதாப்பேட்டை பகுதியில் பரவியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் சுகாதாரமின்றி இருக்கிறது. பேக்கரி, ஸ்வீட் கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கும் உணவு பொட்களை கண்டுபிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றனர்.

* குழந்தைகள் பாதிப்பு
பேக்கரி கடைகளில் உள்ள உணவு பொருட்களை பெரும்பாலும் குழந்தைகள்தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இதற்காக குழந்தைகளை கவருவதற்கு அதிகப்படியான நிறமிகள் சேர்க்கப்படுவதாகவும் புகார்கள் உள்ளது. அதோடு சுகாதாரமற்ற முறையில் தயாரித்து தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாலும், அதிகப்படியான நிறமிகளாலும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

* தரமற்ற எண்ணெய் பயன்பாடு
சிப்ஸ், சிக்கன் பக்கோடா, பேக்கரி கடைகளில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை அழிக்காமல் மீண்டும் அதிலேயே உணவுப்பொருட்கள் தயாரிக்கின்றனர். இதனால் பலவேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே சுகாதாரமான முறையில் தயார் செய்கிறார்களா என்பதை கண்காணிப்பதுடன், தரமான எண்ணெய் பயன்படுத்துவதை உறுதி செய்ய அடிக்கடி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்த வேண்டியது அவசியமாகிறது.

Tags : Velore- Alakadu Road , Vellore: Two people vomited after eating spider chips at a shop on Arcot Road: Authorities demand investigation.
× RELATED நாடு முழுவதும் இளநிலை...