×

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் போர்வெல் கட்டணம் அடிக்கு ரூ.15 உயர்வு: அகில இந்திய அளவில் நாளை முதல் 3 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு

சேலம்: டீசல்,உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக போர்வெல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, நாளை (31ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு போர்வெல் உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் கோடை காலத்திற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள ஏரி, குளம், குட்டைகள் மற்றும் கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின்,நீர்மட்டம் சரிய ஆரம்பித்துள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாய பணிகளுக்காகவும்,வீட்டு உபயோகத்திற்கும் போர்வெல் அமைத்து தண்ணீரை பயன்படுத்த பலர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வால், போர்வெல் அமைப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்,கோடையில் போர்வெல் அமைக்கலாம் என எண்ணியிருந்த விவசாயிகளும்,பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே,டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள போர்வெல் உரிமையாளர்கள் நாளை (31ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து போர்வேல் மற்றும் ஏஜெண்டுகள் நலச்சங்க நிர்வாகி மாதேஸ் கூறியதாவது: சமீபகாலமாக கலப்பட டீசலை ஒருசிலர் பயன்படுத்தி வந்ததால்,போர்வெல் கட்டணங்கள் இருவேறு வித்தியாசத்தில் இருந்து வந்தது. இந்த டீசல் பயன்பாட்டால்,போர்வெல் வாகனங்களில் பழுது ஏற்பட்டதால்,தற்போது அனைவரும் ஒரே நிலையிலான கட்டணத்திற்கு வந்துவிட்டனர். இதனிடையே, உக்ரைன்-ரஷ்யா போரை காரணம் காட்டி போர்வெல்லுக்கான உதிரிபாகங்கள் விலையை பலமடங்கு உயர்த்தி விட்டனர். மேலும், நான்கரை மாதங்களுக்கு பிறகு டீசல் விலையும் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக போர்வெல் அமைக்க ஏற்கனவே இருந்த செலவில் இருந்து, ஒரு அடிக்கு கூடுதலாக ரூ.7 வரை செலவு அதிகரித்துள்ளது. இதனால்,போர்வெல் கட்டணங்களை கட்டாயம் உயர்த்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, போர்வெல் அமைக்க முதல் 300 அடி வரை,ஒரு அடிக்கு ரூ.90 என கணக்கிட்டு வந்த நிலையில்,தற்போது அந்த கட்டணம் ரூ.15 உயர்த்தி ரூ.105 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டண விகிதத்தின்படி,முதல் 300 அடிக்கு ரூ.105, அதன்பின்னர் 400 அடி வரைக்கும் ரூ.115 எனவும்,500 அடி வரைக்கும் ரூ.125 எனவும்,600 அடி வரைக்கும் ரூ.145 எனவும், 700 அடி வரைக்கும் ரூ.175 எனவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல்,அதாவது 700 அடிக்கு மேல் ரூ.215,ரூ.265, ரூ.315, ரூ.415, ரூ.515 என ஒவ்வொரு 100 அடிக்கும்,கூடுதலாக கட்டண உயர்வு இருக்கும். இதனால் ஒட்டுமொத்தமாக போர்வெல் அமைக்கும் பொதுமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படும். வழக்கமாக,டீசல் விலையிலிருந்து ரூ.10 வரை போர்வெல் கட்டண உயர்வு செய்யப்படும்.

ஆனால் தற்போது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு,டீசல் விலையிலிருந்து ரூ.5 வரை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை காரணம் காட்டி,உதிரிபாகங்களின் விலையை உயர்த்தியிருப்பது, போர்வெல் தொழிலை நசுக்குவது போன்று உள்ளது. இத்துடன் டீசலும் விலை உயர்ந்த வருவதால்,தொழிலை காப்பாற்ற கட்டண உயர்வை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.இந்த திடீர் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,நாளை (31ம் தேதி) முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதில்,அகில இந்திய அளவில்,அனைத்து போர்வெல் உரிமையாளர்களும் பங்கேற்கிறார்கள்.இவ்வாறு மாதேஸ் தெரிவித்தார்.


Tags : Borewell ,India , Borewell tariff hike by Rs 15 per liter due to hike in diesel and spare parts prices: All India strike to be declared for 3 days from tomorrow
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!