இரயுமன்துறையில் பரபரப்பு தாமிரபரணி ஆற்றின் கரையில் பைபர் படகுகள் தீ பிடித்து எரிந்தன

நித்திரவிளை: நித்திரவிளை அருகே இரயுமன்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒதுக்கி நிறுத்தப்பட்டிருந்த பைபர் படகுகள் திடீரென தீ பிடித்து எரிந்தன. குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று விட்டு, இரயுமன்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் தங்களது பைபர் படகுகளை மீனவர்கள் ஒதுக்கி விட்டு செல்வது வழக்கம். இவ்வாறு ஒதுக்கி விடப்பட்டிருந்த பைபர் படகுகளில் ஒரு படகு நேற்று  மாலை  திடீரென தீ பிடித்து எரிந்தது. காற்றும் வீசியதால் பக்கத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்து கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையில் வீரர்கள் சென்று தீயை போராடி அணைத்தனர். என்றாலும் ஒரு படகு முற்றிலும் எரிந்தது. 5 பைபர் படகுகள் சேதமடைந்தன. தீயில் கருகிய பைபர் படகுகள் வள்ளவிளை பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானதாகும். அந்த பகுதி வழியாக சென்ற நபர்கள் யாரேனும்  சிகரெட் பற்ற வைத்து விட்டு போட்ட தீ காரணமாக, சருகுகளில் தீ பிடித்து படகுகளுக்கு பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: