×

இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு உக்ரைனில் தாக்குதலை குறைக்க ரஷ்யா முடிவு: இருநாட்டு அதிபர்கள் விரைவில் சந்திப்பு; போர் முடிவுக்கு வருமா?

லிலிவ்: இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதலை பலமடங்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் நேற்று 34வது நாளாக தொடர்ந்தது. முதலில் தலைநகர் கீவ், 2வது பெரிய கார்கிவ், லிலிவ் மற்றும் வர்த்தகம், துறைமுகம் பகுதியான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற ரஷ்யா, தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில், கெர்சன் நகரை மட்டும் முழுமையாக ரஷ்ய கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. மற்ற நகரங்கள் சின்னாப்பின்னாமாகி மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. இருப்பினும், மரியுபோல், கார்கிவ், லிலிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா இன்னும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக  ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் இருந்த இடங்களை ஒவ்வொன்றாக உக்ரைன் படைகள் தன் வசப்படுத்தி வருகிறது. இதனால், உக்ரைனின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மேற்கு உக்ரைன், கிழக்கு உக்ரைன் என நாட்டை இரண்டாக உடைக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கி உள்ளது. முதலில் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற கவனம் செலுத்தி வருகிறது.

இதன் காரணமாக ட்ரோஸ்டியானெட்ஸ் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதேபோல், கீவ்வின் வடமேற்கே உள்ள இர்பின் நகரை உக்ரைன் படைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுத்து உள்ளது. இந்த சூழலில், டான்பாஸ் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இலக்கே டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றி, உக்ரைன் அதிபரை சரணடைய செய்வதுதான். ஆனால், இந்த விவகாரத்தில் சமரசத்திற்கு தயார் என உக்ரைன் அதிபர் கூறி உள்ளது பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

இதற்கிடையே, இஸ்தான்புல்லில் ரஷ்ய மற்றும் உக்ரைன் தூதுக்குழுக்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின் கூறுகையில், ‘உக்ரைனில் உள்ள கீவ், செர்னிவ் மீதான ராணுவ நடவடிக்கைகளை பல மடங்கு குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். ரஷ்யா சார்பில் பங்கேற்ற தலைமை பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில், ‘அர்த்தமுள்ள  பேச்சுவார்த்தை நடந்துள்ளது. உக்ரைனின் கோரிக்கைகள் ரஷ்ய அதிபர் புடினிடம் வைக்கப்படும். ஜெலன்ஸ்கியும், புடினும் சந்திக்கலாம்’ என்றார். புடின் - ஜெலன்ஸ்கி இடையே நடக்கும் பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

* பேச்சுவார்த்தைக்கு சென்ற 3 பேரின் உடலில் விஷம்
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த மார்ச் 3ம் தேதி போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், உக்ரைன் சார்பில் செல்சியாவின் கோடீஸ்வரர் ரோமன்  அப்ரமோவிச், உக்ரைன் எம்பி ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, அப்ரமோவிச், ருஸ்டெம் உமெரோ உள்ளிட்ட 3 பேருக்கு திடீரென உடல்நலம் குன்றியது. இது தொடர்பாக ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘பேச்சுவார்த்தையின் போது அப்ரமோவிச் உள்ளிட்டோர் சாக்லெட் சாப்பிட்டு, தண்ணீர் மட்டுமே குடித்துள்ளனர். அவர்களின் உடலில் விஷத்தன்மை ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் மூன்று பேரும் மயக்க நிலையில் இருந்தனர். அவர்களின் கண்கள் சிவந்து இருந்தன.’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல், சில செய்தி நிறுவனங்களும் ரசாயன ஆயுத பாதிப்பால் ஏற்பட்ட விஷத்தன்மையால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

60 மத கட்டிடங்கள் அழிப்பு
* கடந்த ஒரு மாத போரில் தனது நாட்டில் இருந்த 60க்கும் மேற்பட்ட மதம் சார்ந்த கட்டிடங்களை ரஷ்ய படைகள் அழித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.
* மேற்கு உக்ரைனின் ரிவ்னே பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
* உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்வதற்காக, அங்கு மனிதநேய அடிப்படையில் போர்நிறுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் தொடங்கினார்.


Tags : Russia ,Ukraine ,Istanbul , Russia decides to reduce attacks on Ukraine: Istanbul talks Will the war end?
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...