பொன்னேரியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: `கோவிந்தா, கோவிந்தா’ பாடல் வடிவில் நூதன முறையில் கோஷம்

பொன்னேரி: பொன்னேரி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்குகளை கண்டித்து 2வது நாளாக  முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி, ரயில்வே, உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

தொழிலாளர் விரோத சட்டதிருத்தத்தை திரும்பபெற வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும்.  மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ திரும்பபெற வேண்டும்.  பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  ஆர்ப்பாட்டத்தில், வலியுறுத்தப்பட்டது. சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்றிய பாஜ அரசின் அவலங்களை விளக்கும் வகையில் `கோவிந்தா, கோவிந்தா’ என பாடல் வடிவில் நூதன முறையில் கோஷமும் எழுப்பப்பட்டது.

திருத்தணி: திருத்தணி கமலா திரையரங்கம் அருகே தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து  கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் திமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜி.ராமதாஸ் தலைமை தாங்கினார்.  சிஐடியு கே.எஸ்.சம்மந்தம், டாஸ்மாக் சந்திரன், விவசாய சங்கம் அப்துல் அகமது, ஆட்டோ சங்கம் கரிமுல்லா, சிஜடியு மகளிர் சங்க ஜெயவேல் சுமதி, ஆட்டோ ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பட்டது. இதில்,   பல்வேறு தொழிற்சங்கத்தை  சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: