காமெடி நடிகருக்கு பளார் விட்ட விவகாரம்: வில் ஸ்மித் மீது விசாரணை

லாஸ்ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். விழாவின்போது, அங்கிருந்த நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடாவின் ஹேர்ஸ்டைல் குறித்து, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். வில் ஸ்மித்தின் மனைவி ஜடா, அலோபெசியா என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற மொட்டை தலை நடிகையின் கேரக்டருடன் இணைத்து கிறிஸ் ராக் கிண்டலடித்தார். உடனே மேடைக்கு வந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். உனது வாயால் என் மனைவியின் பெயரை சொல்லாதே என கிறிஸ் ராக்கை பார்த்து சத்தமிட்டு கூறினார் வில் ஸ்மித்.

இந்நிலையில் நேற்று கிறிஸ் ராக்கை டேக் செய்து இன்ஸ்டாகிராமில் வில் ஸ்மித் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரம், `உருவகேலி எனும் வன்முறையை விட, அறைந்தது பெரிய வன்முறை அல்ல. உருவகேலி செய்வோருக்கு, அதன் தீவிரத்தை புரிய வைக்க வேண்டிய நேரமிது’ என்றும் பலர் சமூக வலைதளங்களில் வில் ஸ்மித்துக்கு ஆதரவு குரலும் தந்தனர். சமூக வலைத்தளத்தில் இந்த விவகாரம் வைரலானது. வில் ஸ்மித்துக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனவத்தும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அன்ட் சயின்சஸ், இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் விதிகள் மற்றும் கலிபோர்னியா மாகாண சட்டங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்த அமைப்பு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: