ஜனநாயகம் மீது நேரடி தாக்குதல் பாஜ.வுக்கு எதிராக ஒன்றிணைவோம்... முதல்வர்களுக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: பாஜ.வுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, பாஜ.வுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று பாஜ அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டின் ஜனநாயகத்தின்  மீது ஆளும் பாஜ நடத்தி வரும் நேரடி தாக்குதல்கள் குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவிக்கவே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாஜ.வுக்கு எதிராக போராட வேண்டும். பாஜ.வின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து முற்போக்கு சக்திகளும் கைகோர்த்து செயல்பட வேண்டும். அனைவருக்கும் ஏற்றதொரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து இது குறித்து ஆலோசனை நடத்த  வேண்டும். நமது நாட்டிற்கு தகுதியான அரசை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், ஒருங்கிணைந்த மற்றும் கொள்கை ரீதியான எதிர்ப்பை உருவாக்குவதற்கு ஒன்றிணைவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: