×

மானிய உரம் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை விற்கும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து: வேளாண் துறை எச்சரிக்கை

சென்னை: மானிய உரங்கள் விற்பனையில் இதர விவசாய இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை எச்சரித்துள்ளது.தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் வாயிலாக நேரடி பயன் பரிமாற்றம் வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மானிய உரங்களை விற்கும் சமயம், சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக இதர இடுபொருட்களையும், வாங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதர இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. எனவே, இத்தகைய விற்பனை, உரக்கட்டுப்பாட்டு ஆணை, 1985க்கு புறம்பான செயலாகும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்கள் குறித்த புகார்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண். 93634 40360 மற்றும்  மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரிடம்  தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Department of Agriculture Warning , In the sale of subsidized fertilizer Licenses of grocery stores selling other agricultural inputs revoked: Department of Agriculture Warning
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...