பதவியில் இல்லாததால் தினமும் என் பேட்டி வருவதே இல்லை: மாஜி அமைச்சர் ஜெயக்குமார் புலம்பல்

சென்னை: பதவியில் இல்லாததால் எனது பேட்டியை ஊடகங்கள் ஒளிபரப்புவதே இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவின்போது திமுக பிரமுகரை தாக்கியது, கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, ராயபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நிபந்தனை  ஜாமீனில் வெளியில் வந்துள்ள அவர், 14 நாட்களுக்கு ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை காவல்  ஆய்வாளர் பூபாலன் முன்னிலையில் கையெழுத்திட்டார்.

பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  என்னுடைய பணிகளை முடக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வேன். சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அது அவருடைய விருப்பம். யார் வேண்டுமானாலும் சுற்றுப் பயணம் செய்யலாம். முன்பெல்லாம் எனது பேட்டி அனைத்து ஊடகங்களிலும் தினசரி ஒளிபரப்பாகும். தற்போது பதவி இல்லாததால், எனது பேட்டியை யாரும் ஒளிபரப்புவதே இல்லை. ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: