சசிகலா சுற்றுப்பயணத்தால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தண்டையார் பேட்டை:  சசிகலா சுற்றுப்பயணத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என, திமுக பிரமுகரை  அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக ராயபுரம் காவல்நிலையத்துக்கு கையெழுத்துபோட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது.  வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டுபோட முயன்றதாக திமுக பிரமுகர் அரைநிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டார்.

இதையடுத்து, திமுக பிரமுகரை தாக்கிய வழக்கு, நோய் தொற்று பரவும் என தெரிந்தும் மறியல் செய்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயகுமாரின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மார்ச் 29ம் தேதி(இன்று) முதல் 14 நாட்கள் ராயபுரம் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை ராயபுரம் காவல்நிலையம் வந்து, காவல் ஆய்வாளர் பூபாலன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். கையெழுத்துபோட்டுவிட்டு  வெளியில் வந்த ஜெயக்குமார் நிருபர்களிடம், ‘என்னுடைய பணிகளை முடக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வேன். சசிகலா சுற்றுப்பயணம் செய்வதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது அவருடைய விருப்பம். யார் வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செய்யலாம். இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார்.

Related Stories: