கிறிஸ் ராக்குக்கு பளார் விட்ட விவகாரம்; அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை: மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்; கங்கனா ஆதரவு

மும்பை: தனது மனைவி குறித்து விமர்சித்து பேசிய கிறிஸ் ராக்கை பிரபல நடிகர் வில் ஸ்மித் பளார் விட்டதற்கு தற்போது மன்னிப்பு கோரினார். வில் ஸ்மித்தின் செயலை நடிகை கங்கனா பாராட்டி உள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித்தின் தலைமுடி குறித்து நகைச்சுவையாக விமர்சித்து பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடைக்கு சென்று கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்தார். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பார்த்துக் கொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் வில் ஸ்மித்தின் செயல், உலக அரங்கில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று நடந்த சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.

அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. எனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், வில் ஸ்மித்தின் செயலுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘எனது அம்மா அல்லது சகோதரியின் நோய் பாதிப்பு தொடர்பாக மற்றவர்களை சிரிக்க வைத்த முட்டாள்களை நான் அவரை (வில் ஸ்மித்) போன்று அறைந்திருப்பேன்’ என்றார்.

Related Stories: