மியாமி ஓபன் டென்னிஸ்; கிவிட்டோவா, ஸ்வியாடெக், ஒசாகா காலிறுதிக்கு தகுதி: 4வது சுற்றில் சிட்சிபாஸ், அல்காரஸ்

மியாமி: கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் மற்றும் ஸ்பெயினின் இளம் வீரர் அல்காரஸ் கார்ஃபியா ஆகியோர் மியாமி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மியாமி ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று இரவு நடந்த 3ம் சுற்றுப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசுடன், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் மினார் மோதினார். இதில் ஏடிபி தரவரிசையில் 5ம் இடத்தில் உள்ள சிட்சிபாஸ், 28ம் இடத்தில் உள்ள அலெக்ஸ் டி மினாரை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் இளம் வீரர் அல்காரஸ் கார்ஃபியாவுடன், குரோஷிய வீரர் மாரின் சிலிக் மோதினார். இப்போட்டியில் அல்காரஸ் 6-4, 6-4 என நேர் செட்களில் வென்று, 4ம் சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதியில் கிவிட்டோவா, ஸ்வியாடெக் மகளிர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றுப் போட்டியில் செக். குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவும், ரஷ்ய வீராங்கனை வெரோனிகா குடெர்மெட்டோவாவும் மோதினர். இதில் முதல் செட்டை போராடி டை பிரேக்கரில் 7-6 என கைப்பற்றிய கிவிட்டோவா, 2ம் செட்டை எளிதாக 6-4 என கைப்பற்றி, காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் டென்னிஸ் நட்சத்திரம் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கவுஃபை 6-3, 6-1 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். இன்னொரு போட்டியில் ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா, 6-3, 6-4 என நேர் செட்களில் அமெரிக்க வீராங்கனை ஆலிசன் ரிஸ்கை  எளிதாக வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் மியாமி ஓபன் டென்னிசில் மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு, தொடர்ந்து 2வது முறையாக நவோமி ஒசாகா தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: