×

சரிவர முடிவெட்டாமல் வந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு முடிதிருத்திய திமுக ஊராட்சி தலைவர்: திருப்போரூரில் ருசிகரம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாம்பாக்கம் ஊராட்சி  தலைவராக  திமுகவை சேர்ந்த வீரா என்ற வீராசாமி  வெற்றிபெற்றார். இவர், நேற்று மேற்கண்ட பள்ளிகளுக்கு சென்று, பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதி குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.

அப்போது, மாவட்ட அளவில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வருவது குறித்து பாராட்டு தெரிவித்தார்.  பின்னர், பள்ளி மாணவர்களில் பலரும் தலைமுடியை ஒழுங்காக வெட்டாமல் வந்திருப்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டார். அப்போது ஆசிரியர்,  இதுகுறித்து பெற்றோர்களிடம் பலமுறை தெரிவித்தும் மாணவர்கள் இதுபோன்று வருகின்றனர்என கூறினார். இதையடுத்து, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து பேசிய ஊராட்சி தலைவர் வீரா, பள்ளியில் படிக்கும் போதே ஒழுக்கத்துடன் வளர்த்தால்தான் அவர்கள் அரசு அதிகாரிகளாகவோ, பொது வாழ்க்கையிலோ வெற்றிபெற்று சாதனை புரிய முடியும். இதற்கு பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என எடுத்துக்கூறினார்.

நீங்கள் சம்மதித்தால் பள்ளி வளாகத்திலேயே முடிதிருத்தும் தொழிலாளர்களை கொண்டு போலீஸ் கட்டிங்போல் வெட்ட தான் உதவி செய்வதாகவும் தொிவித்தார். ஊராட்சி  தலைவரின்  முயற்சிக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி வளாகத்தில் முடித்திருத்தும் கலைஞர்கள் 10க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டு 300 மாணவர்கள் முடிகள் வெட்டப்பட்டன. இதுபோல் மாணவர்களின் கை, கால் நகங்களும் வெட்டி சுத்தம் செய்யப்பட்டன. இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags : DMK panchayat ,Thiruporur , DMK panchayat leader who gave haircuts to government school students who did not make correct decisions: Delicious in Thiruporur
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...