×

ஒரு பெண்ணின் காதல்

நன்றி குங்குமம் தோழி

பெண் மைய சினிமா

சில படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். அந்தப் படங்களை மகிழ்ச்சியான தருணங்களில் பார்க்கும்போது மகிழ்ச்சி பல மடங்காகிவிடும். வேதனையான சமயங்களில் பார்க்கும்போது படத்தில் வரும் கதாபாத்திரங்களின் வேதனைகளோடு நம்  வேதனையும் கரைந்துவிடும். மகிழ்ச்சியை அதிகரிப்பதும் வேதனையைக் கரைய வைப்பதும் காதலுக்கே உரிய பொதுவான குணம்.  மகிழ்ச்சியை அதிகரித்து வேதனையைக் குறைக்கின்ற  படங்களும் காதலை மையமாக வைத்த படங்களாகவே இருக்கின்றன. அந்த வகையில் காலத்தால் அழியாத  காதல் காவியமாக மிளிர்கிறது  ‘என்னு நிண்டே மொய்தீன்’.  

எத்தனை முறை பார்த்தாலும் காதலைப் போல திகட்டாத படம். ‘திரிஷ்யம்’, ‘பிரேமத்’திற்குப் பிறகு உலகளவில் அதிக வசூலைக் குவித்த மூன்றாவது மலையாளப்படம் என இதன் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.கேரளாவின் இயற்கை எழிலைப் பிரதிபலிக்கும் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள முக்கம் என்ற ஊர். அங்கே அறுபதுகளில் நடந்த உண்மைக்கதையை எந்தவித சமரசமும் இல்லாமல் படமாக்கியிருக்கின்றனர். குறிப்பாக ஒரு பெண்ணின் அழுத்தமான காதலை மனம் நெகிழும்படி சித்தரிக்கிறது இந்தப் படம்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சை பசேல் என மின்னும் சொர்க்க பூமி முக்கம். அங்கே உள்ள  செல்வாக்கான இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவன் மொய்தீன்.  கால்பந்து விளையாட்டில் ஜாம்பவான்.  சோஷலிச கட்சியில் ஈடுபாடு கொண்ட இளைஞன்.  மத நம்பிக்கைகளுக்கு எதிரான மனிதன். ஆனால், அவனது தந்தையோ அக்மார்க் இஸ்லாமியர்.

கட்டுக்கோப்பான ஆள். அதே ஊரில் பாரம்பரியமான இந்துக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் காஞ்சனமாலா.  மொய்தீனின் குடும்பத்துக்குச் சமமான செல்வாக்கு வாய்ந்த குடும்பம்.  அந்தக் குடும்பத்திலேயே முற்போக்கான சிந்தனை வாய்ந்த பெண் காஞ்சனமாலா மட்டுமே. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையில் காதல்.  பெரிதாக வெளியில் தெரியாத ரகசிய காதல் அது. கடிதங்கள் வழியாகவும் ரகசிய சந்திப்புகள் வழியாகவும் காதலை வளர்த்துக்கொள்கின்றனர்.  மொய்தீனைத் தவிர வேறு யாரையும் மனதில் கூட நினைக்காமல் இருக்கிறாள் காஞ்சனமாலா.  கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது காஞ்சனமாலாவுடன் தான் என்று உறுதியாக இருக்கிறான் மொய்தீன்.

மொய்தீனுக்கும் காஞ்சனமாலாவுக்கும் இடையில் அரங்கேறிக் கொண்டிருந்த காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது. பிரச்னை வெடிக்கிறது.  மொய்தீனை வீட்டை விட்டு துரத்தியடிக்கிறார் அவனது தந்தை.  வீட்டுக்குள்ளேயே சிறைக்கைதியைப் போல அடைக்கப்படுகிறாள் காஞ்சனமாலா. தவிர, அண்ணன்களின் கண்காணிப்புக்குள்ளேயே இருக்கிறாள். அவள் வீட்டில்  ஒருவர் கூட மொய்தீன் மீதான காதலுக்கு ஆதரவாக இல்லை. காஞ்சனமாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துவைக்க அண்ணன்கள் பரபரக்கின்றனர்.

அவளுக்கு வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் நிராகரிப்பதால் அண்ணன்களின் கோபத்துக்கு உள்ளாகிறாள். அண்ணன்கள் காஞ்சனமாலாவின் மீது வன்முறையில் ஈடுபடுகின்றனர்.  அப்போதும் கூட அவளால் மொய்தீனை மறக்க முடியவில்லை.  தடைகளை மீறி இருவரும் சந்தித்துக்கொண்டு காதலை வளர்க்கின்றனர்.   கடுங்கோபத்துக்கு ஆளாகும் மொய்தீனின் தந்தையே அவனைக் கத்தியால் குத்திவிடுகிறார்.  உயிர்பிழைத்த மொய்தீன் தந்தையை காவல்துறையிடம் மாட்டிவிடாமல் காப்பாற்றிவிடுகிறான். மொய்தீனின் அம்மா மட்டுமே அவனின் காதலுக்கு உறுதுணையாக இருக்கிறார்.  வருடங்கள் வேகமாக ஓடுகின்றன.  

கிட்டத்தட்ட 25 வருடங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த காஞ்சனமாலாவை மீட்டு மொய்தீன் திருமணம் செய்துகொண்டாரா... ஏன் இந்தப் படம் சிறந்த காதல் படமாக விமர்சகர்களால் போற்றப்படுகிறது என்பதை அறிய ஒரு முறையாவது படத்தைப் பாருங்கள். படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் காதல் கவிதைகளாக வசீகரிக்கின்றன. உதாரணத்துக்கு மொய்தீனுக்கும் காஞ்சனாவுக்கும் இடையிலான காதலைத் தெரிந்த பிறகும் கூட அப்பு என்பவன் ஒரு தலையாக காஞ்சனாவைக் காதலிக்கிறான். ஒரு நாள் காஞ்சனாவைப் பெண் பார்க்க வருகிறான்.

அவனிடம், ‘‘ நீ என்னைக் காதலிப்பது தெரியும் அப்பு. ஆனால், நீ என்னைக் காதலிப்பதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக நான் மொய்தீனைக் காதலிக்கிறேன். நான் மொய்தீனைக் காதலிப்பதைக் காட்டிலும் பத்தாயிரம் மடங்கு அதிகமாக அவர் என்னைக் காதலிக்கிறார். நீ என்னைக் கட்டாயப்படுத்தினால் என் பிணத்தைத்தான் கல்யாணம் செய்ய முடியும்...’’ என்கிறாள். இப்படி வசனங்களும் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.  

இந்தப் படத்துக்காக ஏழு வருடங்கள் உழைத்திருக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.விமல். குறிப்பாக திரைக்கதை எழுத மட்டும் மூன்று வருடங்களாகி இருக்கிறது. இத்தனைக்கும் இவரது முதல் படம் இது.படத்தைப் பார்த்த பிறகு பிருத்விராஜ் மொய்தீனாகவும் பார்வதி காஞ்சனமாலாவாகவுமே மனதில் நிற்பார்கள். அந்தளவுக்கு அசலான நடிப்பு. படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றும் புதிதாக இருக்கிறது.

மனிதன் காதலிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவனுக்கு ஏதோவொன்று தடையாக இருந்து வருகிறது.  மதமும் சாதியும் பணமும் இதில் முக்கியத் தடை. இந்தத் தடைகளை எல்லாம் கடந்து நிற்கும் காதல் வரலாற்றில் இடம்பிடிக்கின்றன. இப்படி வரலாற்றில் இடம்பிடிக்கிற காதலர்கள் பெரும்பாலும் ஒன்று சேர்வதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். மொய்தீன் - காஞ்சனமாலாவின் காதலும் வரலாற்றுக் காதல் தான்.  அதற்கு சாட்சியாக காலம் கடந்தும் நிற்கும் ‘என்னு நிண்டே மொய்தீன்’.

தொகுப்பு: த.சக்திவேல்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!