அடகு வைத்திருந்த பைக்கை மீட்க பணம் தராததால் தாயை எரித்து கொன்ற மகனுக்கு 40 ஆண்டு சிறை-புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை : அடகு வைத்திருந்த பைக்கை மீட்க பணம் தராததால் தாயை எரித்து கொன்ற வாலிபருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையை சேர்ந்த துரைராஜ் மனைவி லீலாவதி (56). இவர்களது மகன் சந்தோஷ்குமார் (26). கடந்த 2021 ஆகஸ்ட் 31ம்தேதி அன்று சந்தோஷ்குமார், அடகு வைத்திருந்த பைக்கை மீட்க தாய் லீலாவதியிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது பணம் இல்லை என்று சொல்லியதால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தாய் லீலாவதி மீது ஊற்றி பற்ற வைத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் லீலாவதியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி லீலாவதி இறந்தார்.

இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் மாவட்ட அரசு பொது வழக்கறிஞர் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பளித்தார்.

குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். சந்தோஷ்குமார் 40 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறையில் இருக்க வேண்டும். தண்டனையை குறைக்கவோ அல்லது விடுவிக்கவோ கூடாது. சந்தோஷ்குமார் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக மூன்று மாதகாலம் தனிமை சிறையில் வைக்க வேண்டும். இந்த தண்டனையை மாதத்தின் முதல் தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் அனுபவிக்க வேண்டும். இந்த தனிமை சிறையை 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: